சூது கவ்வக்கூடாது
7/15/2015 2:15:17 PM
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டச் சர்ச்சை எழுந்தபோது, ரசிகர்கள் மட்டுமல்ல. தேசத்துக்கே அதிர்ச்சி.டெஸ்ட், ஒருநாள் போட்டிகளைக் காட்டிலும், டி20க்கு மவுசு கூடியிருக்கிறது. இதற்குக் காரணம், ஆட்டத்தின் போக்கு ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுசெல்ல வைத்துவிடும். மெகா வெற்றி அடைந்த அணி, அடுத்த நாளே படுதோல்வியைச் சந்திக்கும் விபரீதங்களும் இருக்கின்றன. செய் அல்லது செத்துமடி என்பது போன்றது இந்த விளையாட்டு.2013ல் நடந்த ஐபிஎல் டி20 தொடரில், வீரர்கள் சிலர் ஸ்பாட் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த சாந்த், அன்கித் சவான், அசோக் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாந்த், இந்திய அணியில் இடம்பெற்ற வீரர். 3 வீரர்களும் கிரிக்கெட் விளையாட இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) ஆயுள் தடை விதித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ராவுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் ஒதுங்க வேண்டிய நிலை உருவானது.சூதாட்டச் சர்ச்சை குறித்து நீதிபதி முகுல் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், குருநாத், குந்த்ரா, ஐபிஎல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்ராமன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் குழு நேற்று குருநாத்துக்கும், குந்த்ராவுக்கும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயுள் தடையும், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு தடையும் விதித்து தீர்ப்பளித்தது. சுந்தர்ராமன் மீது மேலும் விசாரணை தேவைப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது.
குருநாத், ‘சூதாட்ட விளைவுகள் குறித்து தனக்கு தெரிந்திருக்கவில்லை’ என்று கூறியதற்கும், குந்த்ரா ‘இந்தியாவில் சூதாட்டம் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரியாது’ என்று கூறியதற்கும் நீதிபதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கென்று ஏராளமான ரசிகர்கள். டோனி, ரெய்னா, ரகானே, ஜடேஜா எனப் பிரபல வீரர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் வேறு அணிகளில் இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.சூதாட்டச் சர்ச்சையில் அப்பாவி வீரர்கள் சிக்கி, அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையே தொலைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. பேராசை பெரும் நஷ்டம். குற்றம் புரிபவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதன் மூலம்தான், கிரிக்கெட் புனிதமாகும். சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கும், ரசிகர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும் இதுதான் வழி. கிரிக்கெட்டை என்றும் சூது கவ்வக்கூடாது.