விம்பிள்டன் முத்தாய்ப்பு
7/13/2015 2:02:19 PM
டென்னிஸ் தெரிகிறதோ இல்லையோ, விம்பிள்டன் தெரியாதவர்கள் இருப்பதில்லை. விம்பிள்டனில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் சானியா மிர்சா. மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை இந்திய வீராங்கனை இதுவரை வென்றது இல்லை. சுவிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து, ரஷ்யாவின் எகடரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியை இறுதிப்போட்டியில் வீழ்த்திக் காட்டியிருக்கிறார் சானியா.இந்த வெற்றி எளிதாகக் கிடைக்கவில்லை. முதல் செட் எதிர் ஜோடி வசம். இரண்டாவது செட்டில் டைபிரேக்கரில் வெற்றி. அனல் பறந்த மூன்றாவது செட்டில் பதற்றமின்றி ஆடி வென்று சானியாவும், ஹிங்கிசும் கோப்பையை வசமாக்கினர். கலப்பு இரட்டையர் பிரிவில் ஏற்கனவே இந்திய வீரர் மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன்(2009), பிரெஞ்ச் ஓபன்(2012) பட்டங்களை வென்ற சானியா, கடந்த ஆண்டு பிரேசில் வீரர் புரூனோ சோரசுடன் இணைந்து யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். 2003ல் விம்பிள்டன் ஜூனியர் மகளிர் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ரஷ்யாவின் அலிசா கிலேபானோவுடன் இணைந்து சானியா வென்றிருக்கிறார்.
‘இந்த வெற்றி, நம்மாலும் விம்பிள்டன் பட்டம் வெல்ல முடியும் என்று இந்தியப் பெண்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும்’ என்று பெருமிதப்படும் சானியாவுக்கு ஜனாதிபதி, பிரதமர், தெலங்கானா முதல்வர் என வாழ்த்துகள் மழையாகப் பொழிகின்றன.விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பெயா - ஹங்கேரியின் டிமியா பாேபாஸ் ஜோடியை எளிதாக வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. ஜூனியர் விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் - வியட்நாமின் நாம் ஹோங்லி ஜோடி, அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா - ஜப்பானின் அகிரா சான்டில்லன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது.
விம்பிள்டனில் ஜூனியர் இரட்டையர் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை சுமித் நாகலுக்குக் கிடைத்திருக்கிறது.இந்தியர்களுக்கு விம்பிள்டனில் இந்த முறை மூன்றுவித சாம்பியன் பட்டங்கள் கிடைத்திருக்கின்றன.சர்வதேச அரங்கில், அமிர்தராஜ் சகோதரர்கள், ரமேஷ் கிருஷ்ணன் என டென்னிசில் சாதித்த இந்திய வீரர்கள் குறைவானவர்கள்தான். சானியா, லியாண்டர், சுமித் நாகல் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டு கடினமாக உழைத்தால், 127 கோடி மக்கள் நிறைந்த இந்தியாவில் டென்னிசில் முத்திரை பதிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் உருவாகப்போவது நிச்சயம்.