திருடும்போது அடிச்சிட்டாங்க..போலீசில் திருடன் புகார்
6/11/2025 3:26:43 PM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை ஆசிரியர் நகரை சேர்ந்தவர் மணி. இதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக இரும்பு கம்பி, சிமென்ட் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். சில நாட்களாக இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதை தடுக்க நேற்று முன்தினம் இரவு மணி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது இரும்பு கம்பிகளை திருட வந்த வாலிபரை அவரும், அப்பகுதி மக்களும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.பின்னர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவரை போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர், வழுதரெட்டியை சேர்ந்த கொளஞ்சி (22) என்பது தெரியவந்தது. இந்நிலையில் கொளஞ்சி, போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘நான் திருட முயன்றபோது பொதுமக்கள் என்னை சரமாரியாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென’’ கூறியிருந்தார்.இதுதொடர்பாக போலீசார், மணி மற்றும் சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மணி கொடுத்த புகாரின் பேரில், கொளஞ்சி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.