புதிய அணை கட்டும் விவகாரம் கேரளாவுக்கு துணை போகக்கூடாது : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
6/11/2025 3:19:32 PM
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கடந்தாண்டு மே 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கேரளா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அதை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஆனாலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக கேரளா அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய அணை கட்ட கேரளா அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளது.
தமிழக அரசு, புதிய அணை கட்ட கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்தது. ஆனாலும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என்று கடந்த 4ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு கேரளா அரசின் தவறான நடவடிக்கையை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.