எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு
6/11/2025 3:18:21 PM
சென்னை: தமிழகம் முழுவதும் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 655 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 398 இடங்கள் போக 2,257 இடம் தமிழக மாணவர்களுக்கு உள்ளது. இதே போல், சென்னையில் அரசு பல் மருத்துவ கல்லூரி ஒன்றும் உள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 போக 85 இடங்கள் உள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் 7 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம் 780 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்துள்ளது. அதே போல 23 தனியார் சுயநிதி பல் மருத்துவ கல்லூரி 1432 இடங்கள் அரசுக்கு கிடைத்துள்ளன. உள்ளன. இந்த இடங்களுக்கான, 2015-2016ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மே மாதம் 11ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 28ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 35 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் விற்பனையானது.
அதேபோல, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 32 ஆயிரத்து 184 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் மருத்துவ கல்வி இயக்குனர் கீதா லட்சுமி ரேண்டம் எண்ணை வெளியிட்டார். ரேண்டம் எண் 7532186345 எண்ணை தொடக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் கீதா லட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ மாணவருக்கான ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் சென்று 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். ரேண்டம் எனப்படுவது பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் பட்சத்தில் அவர்களை வரிசை படுத்துவதற்காக கடைசியாக பயன்படுத்தப்படும் எண்ணாகும். ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களை வரிசை படுத்த முதலில் உயிரியல் மதிப்பெண் எடுத்து கொள்ளப்படும்.
அதுவும் ஒன்று போல் இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும், அதுவும் ஒன்று போல் என்றால் அடுத்து கணக்கு மதிப்பெண், அதுவும் ஒரே மாதிரி இருந்தால் பிறந்த தேதி, அதுவும் ஒன்று போல் இருந்தால் கடைசியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். ரேண்டம் எண்ணில் முதலில் இருக்கும் மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடந்த ஆண்டு 124 மாணவர்கள் ஒரே மார்க் பெற்று இருந்தனர். அவர்களில் 68 பேருக்கு ரேண்டம் எண் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.12ம் வகுப்பு மறுமதிப்பீடு மார்க் வந்தவுடன் அதிலிருந்து இரண்டு நாள் கழித்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி வரும் ஜூன் 15ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது. 19ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளது.
கே.கே நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு இந்தாண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கூடுதலாக 65 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும்.இந்தாண்டு கவுன்சலிங் ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் பிளாக் ஏவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இதுவரை தமிழகத்தில் 7 தனியார் மருத்துவகல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி, கோவை கற்பகம் மருத்துவ கல்லூரி, சென்னை கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி, சென்னை தாகூர் மருத்துவகல்லூரி, மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி, நாகர்கோவில் மூகாம்பிகை மருத்துவகல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் அடங்கும்.