வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணி அமைச்சர்கள் நிர்பந்தத்தால் அதிகாரிகள் தவிப்பு
6/11/2025 2:50:02 PM
கோவை: தமிழக அரசின் வருவாய்துறையில் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு சமீபத்தில் நேர்காணல் நடந்தது. கோவை மாவட்டத்தில் 33 இடங்களுக்கு நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. 2,400 பேர் விண்ணப்பம் செய்தனர். தவிர, பதிவுமூப்பு அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 142 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மொத்தம் 2,542 பேர் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. இதில், தகுதியில்லாத 700 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 1,842 பேருக்கு நேர்முக தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில், 1,642 பேர் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். 10 தாசில்தார் மற்றும் உதவி தாசில்தார் குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களுக்கு பணி நியமன ஆணை எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்க அமைச்சர்களிடம் இருந்து சிபாரிசு வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 33 காலியிடங்களுக்கு 2 அமைச்சர்களிடம் இருந்து 60 பேர் பெயர் கொண்ட சிபாரிசு பட்டியல் வந்துள்ளதாக கூறப்படுகிறதுஇந்த சிபாரிசு பட்டியலை ஏற்றுக்கொள்வதா? அல்லது நேர்முக தேர்வில் முறையாக பதில் அளித்த நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை அனுப்புவதா? என்ற குழப்பத்தில் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளனர்.திருநெல்வேலியில் வேளாண் துறை டிரைவர் பணியிடத்துக்கு, அமைச்சர் சிபாரிசு செய்த நபருக்கு பணி வழங்கப்படாததால், அதிகாரி கடும் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவி இழந்த அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கைதாகி கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்.
வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் பணி நியமனத்திலும் ஆளுங்கட்சியினர் பல லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’நேர்மையுடன், வெளிப்படையாக இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் சிபாரிசு பட்டியலால் இழுபறி ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்தில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுமா என்பது சந்தேகம்தான்’’ என்றார்.