3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு
5/16/2015 12:46:51 PM
திருப்பூர்: சிறுமிகள் 3 பேரை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் மங்கலம் குளத்துப்புதூர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஈஸ்வரமூர்த்தி (41). கூலித்தொழிலாளி. மனைவி 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். மாமியார் வீட்டில் ஈஸ்வரமூர்த்தி மகளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 2013 ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி மாலை ஈஸ்வரமூர்த்தியின் மகள், தன்னுடன் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் அப்பகுதியை சேர்ந்த 3 பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தாள். அவர்கள் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த ஈஸ்வரமூர்த்தி தனது மகளை வேறு எங்கோ அனுப்பி விட்டு மற்ற மூன்று பெண் குழந்தைகளையும் வீட்டினுள் அழைத்து சென்றார். டிவியை சத்தமாக வைத்துக்கொண்டு கதவை பூட்டினார். பின்னர் அந்த மூன்று பெண் குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர். இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி வசந்தலீலா நேற்று விசாரித்தார். அவர் அளித்த தீர்ப்பில், ‘’ 3 பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஈஸ்வரமூர்த்திக்கு தலா 10 வருடம் என 30 வருடமும், பாலியல் குற்ற பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலா 7 வருடம் என 21 வருடமும் மொத்தம் 51 வருட சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், மூன்று பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இல்லையென்றால் மேலும் ஒரு வருட கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.