நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது
5/16/2015 12:45:38 PM
திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த நகை வியாபாரிகள் ரமணய்யா, சுனில் ஆகியோர் வழக்கம்போல் சென்னையில் நகை வாங்கி வருவதற்காக நேற்று முன்தினம் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். நெல்லூர் அருகே ரயில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் ரயிலில் ஏறியது. அவர்கள் நகை வியாபாரிகளிடம் துப்பாக்கியை காட்டி ‘நாங்கள் போலீஸ்காரர்கள்’ எனக்கூறியுள்ளனர். மேலும் ‘நீங்கள் முறைகேடாக பணம் எடுத்து செல்வதாக ரகசிய தகவல் வந்துள்ளது. உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் காவல் நிலையத்துக்கு வாருங்கள்’ என தெரிவித்துள்ளனர்.அதன்படி வியாபாரிகள் 2 பேரும் ரயிலில் இருந்து இறங்கி காரில் அவர்களுடன் சென்றனர். நெல்லூர் பைபாஸ் சாலை அருகே காரை நிறுத்திய அவர்கள் வியாபாரிகளை சரமாரி தாக்கி அவர்களிடம் இருந்த ரூ. 72 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் உடனடியாக நெல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கார் பதிவு எண்ணை வைத்து அந்த 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் பிரசன்னா, ரவி, கிரண்பாபு, சிவகிருஷ்ணா என்பதும் 4 பேரும் ஆயுதப்படை போலீசார் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர்.