ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு
5/16/2015 12:37:17 PM
கோவை: போலீசார் எங்களை மிரட்டுகின்றனர். ஆயுதம் போராட்டம் வெல்லும் என்று மாவோஸ்ட்கள் கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாவோயிஸ்ட் தலைவன் ரூபேஸ்(40),அவரது மனைவி ஷைனா(35), நண்பர் அனூப்(40), கண்ணன், வீரமணி ஆகியோர் கடந்த 4ம் தேதி கோவை அருகே கருமத்தம்பட்டியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ேகாவை சிறையில் அடைக்கப்பட்டனர். காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மாவோயிஸ்ட்கள் ஐந்து பேரும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.அப்போது, வேனில் இருந்து இறங்கிய மாவோயிஸ்ட் தலைவன் ரூபேஸ், அவரது மனைவி ஷைனா ஆகியோர் கேரள போலீசார் எங்களை கடத்தி சென்று என்கவுன்டர் செய்து விடுவதாக சிறையில் மிரட்டுகின்றனர் என கோஷமிட்டபடி சென்றனர்.நீதிபதி விசாரித்தபோது ஷைனா, ‘கேரள போலீசார் விசாரணை என்ற பெயரில் ஆபாசமாக பேசுகின்றனர்.
எனது மகள்களை கைது செய்துவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். போலீசார் கைது செய்தபோது என்னுடைய மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது. இதனால் என்னால் சரியாக பார்க்கவும், படிக்கவும் முடியவில்லை இதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்றார்.இதேபோல் மற்றவர்களும் போலீசார் மீது குற்றம்சாட்டினர். 5 பேரின் புகார்களை பதிவு செய்த நீதிபதி, உங்களுக்கு சிறைத்துறை சட்டப்படி அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார். ஜூன் 3ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் ‘போலீசார் எங்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளனர். எங்களை கைது செய்தாலும் எங்களின் போராட்டம் தொடரும், மலை மற்றும் கடற்கரை கிராமத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டம் வெல்லும் என்று கோஷமிட்டபடி சென்றனர். இதனால் அங்்கு பரபரப்பு ஏற்பட்டது.