கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
5/16/2015 12:33:10 PM
கூடுவாஞ்சேரி: சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர், டி.டி.சி. நகர், பலராமபுரம், பள்ளஞ்சேரி, மாடம்பாக்கம், குத்தனூர், ஒரத்தூர், வள்ளலார்நகர், தைலாவரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வரவேண்டும்.இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சுமார் ₹21 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக சரிவர பணி நடைபெறாமல் இருந்ததுடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டன.
இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல ஊரப்பாக்கம் ரயில்வே கேட் வழியாக சுற்றி வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ரயில்வே கேட் அருகே குறுகலான சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சேற்றில் சிக்கி கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டம் நடத்தும்போது மட்டும் மேம்பால பணியை தொடங்குகின்றனர். அதன்பின், மீண்டும் பணியை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.மேலும், இப்பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால், பாதுகாப்பு பணியில் ஊழியர்கள் யாரும் இல்லை.
இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பினி பெண்கள், உடல் ஊனமுற்றோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதால், பலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது.எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், ரயில்வே கேட்டில் பாதுகாப்பு பணி ஊழியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, இதுபற்றி ரயில்வே உயரதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறினர்.