பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது
5/16/2015 12:27:24 PM
திருச்சி: சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் 15 தினங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலையை மாற்றி அமைத்துக்கொள்ளும் அதிகாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 1ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4.18ம், டீசல் ரூ.2.55ம் உயர்த்தப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தொிவித்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3.37ம், டீசல் ரூ.2.98ம் உயர்த்தப்பட்டது. புதிய விலையின்படி திருச்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.37 உயர்ந்து 69.56க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.02 உயர்ந்து ரூ.56.36க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 6951க்கும், டீசல் 56.31க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். எனவே விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ‘டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் 90 சதவீத வியாபாரிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் பால், மளிகை, காய்கறி என அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்’ என்றார்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர் பாண்டியன் கூறும்போது, ‘டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை பம்ப்ஷெட் விவசாயத்தில் தான் துவங்குவோம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் பம்ப்ஷெட் விவசாயம் தான் செய்ய முடியும். மின்சார இணைப்பு இல்லாத விவசாயிகள் டீசல் இன்ஜின் மூலம் விவசாயம் செய்கிறார்கள். இவர் களுக்கு பாதிப்பு ஏற்படும். அனைத்து சிறு விவசாயிகளும் தங்களது உற்பத்தி பொருட்களை இரு சக்கர வாகனங்களில் தான் நகரங்களுக்கு எடுத்து செல்கிறார்கள்.
பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் இரு சக்கர வாகனங்களில் தான் நகரங்களுக்கு பால் கொண்டு செல்கிறார்கள். எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்’ என்றார்.கட்சிகள் எதிர்ப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடி அரசு ஒரு ஆண்டு நிறைவடைந்ததன் பரிசு என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.