ஓராண்டை வீணாக்கியதை தவிர மோடி அரசின் சாதனை எதுவும் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு
5/16/2015 12:23:31 PM
பாட்னா: ஓராண்டை வீணடித்ததைத் தவிர பிரதமர் மோடி அரசின் சாதனை என்று எதுவும் இல்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசின் ஓராண்டு நிறைவையொட்டி நாடு முழுவதும் விரிவாக பிரசாரம் செய்ய பாஜ திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில் மத்திய பாஜ அரசின் ஓராண்டு சாதனை என எதுவும் இல்லை என எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசின் சாதனை என்பது ஓராண்டை வீணடித்ததைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடந்த ஓராண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்று எதையும் என்னால் காண முடியவில்லை என்றார்.
பின்னர் வெற்றிலை வியாபாரி ஒருவரின் குழந்தையை பாராட்டுகையில், பிரதமராக வரவேண்டும் என்று நிதிஷ் வாழ்த்தினார். அப்போது நிதிஷ் பேசுகையில், ஒரு டீ வியாபாரி பிரதமராக வர முடியும் என்றால், ஒரு வெற்றிலை வியாபாரி ஏன் பிரதமராக வரக் கூடாது என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நல்ல நாட்கள் வருகின்றன என்று கூறி வருகிறது. ஆனால் குடிமக்களுக்கு அப்படி எதுவும் வந்ததாக தெரியவில்லை. கருப்பு பணத்தை மீட்டு மக்களின் ஒவ்வொருவரின் கணக்கிலும் ₹20 லட்சத்தை போடுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ரூ. 20 ஆயிரத்தை கூட வங்கி கணக்குகளில் உருவாக்கி தர முடியவில்லை. நாட்டில் உள்ள மக்கள் வேதனையில் வாடும் போது பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு மாறாக அந்த நேரத்தை உள்நாட்டில் பயணம் செய்வதற்கு பயன்படுத்தலாம். பாஜ அளித்த தவறான வாக்குறுதிகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். விரைவில் இதற்காக மக்களுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று சாடினார்.