உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை: கவர்னரிடம் பாஜ எம்பி கோரிக்கை
5/16/2015 12:23:04 PM
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க கோரி பாஜ எம்பி தருண் விஜய் மாநில கவர்னரிடம்மனுஅளித்துள்ளார்.திருக்குறளையும், திருவள்ளுவரின் புகழையும் நாடு முழுவதும் கொண்டு செல்வதில் உத்தரகண்ட் பாஜ எம்பி தருண் விஜய் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும் என்றும், நக்சலைட்டுகளுக்கு எதிராக போராடும் சிஆர்பிஎப் உள்ளிட்ட படை வீரர்களுக்கு திருக்குறளை படிக்க தர வேண்டும் என்றும் அதிரடியாக தருண் விஜய் எம்பி பேசி வருகிறார். தற்போது அதன் தொடர்ச்சியாக தனது மாநிலமான உத்தரகண்டில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் உத்தரகண்ட் கவர்னர் கே கே பாலை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாருக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே திருவள்ளுவருக்கு அங்கு சிலை வைப்பதால் அவரை பற்றி நாடு முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்ளவும், அவரது படைப்புகளை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். தருண் விஜய் எம்பியின் கோரிக்கை குறித்து மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அப்போது கவர்னர் கே கே பால் உறுதி அளித்தாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.