ரூ. 949 கோடியில் மும்பையை கண்காணிக்க 6 ஆயிரம் கேமராக்கள் முதல்வர் பட்நவிஸ் அறிவிப்பு
5/16/2015 12:22:10 PM
மும்பை: மும்பை நகரை கண்காணிக்க 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அறிவித்துள்ளார்.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல்வழியாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து மும்பையில் தீவிர கண்காணிப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் பலப்படுத்தி வருகின்றன. பின்னர் சக்தி மில் வளாகத்தில் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த சில வாரங்களுக்கு முன்புஅறிவித்திருந்தார்.
தற்போது டெல்லியைத் ெதாடர்ந்து மும்பையிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க பாஜ முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே பி பக்சி கூறுகையில், 2008ம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில முக்கிய இடங்களில் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போது நான்கு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரும் நகர் முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது சுமார் ₹949 கோடி செலவில் அடுத்தாண்டு செப்டம்பருக்குள் சுமார் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் நகர் முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக மும்பை தெற்கு பகுதியில் இந்த ஆண்டு நவம்பருக்குள் பொருத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் அலுவலகம், பேரிடர் மீட்பு கண்காணிப்பு மையம், போக்குவரத்து காவல் தலைமையகம் ஆகிய இடங்களில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு கவனிக்கப்படும். இந்த கேமராக்கள் மூலமாக 21 நாட்களுக்கு காட்சிகள் பதிவு செய்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.