சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி, நேரு சிலை : இந்திய அரசு வழங்குகிறது
5/8/2025 3:10:52 PM
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கு காந்தி, நேரு, தாகூர், நேதாஜி ஆகியோரின் சிலைகளை இந்திய அரசு அன்பளிப்பாக வழங்குகிறது. சிங்கப்பூர் சுதந்திர தினத்தின் 50வது ஆண்டு விழாவையொட்டி, பிரமாண்ட அருங்காட்சியகத்தை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையேயான நல்லுறவை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு, சிங்கப்பூர் இந்திய பாரம்பரிய மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா பகுதியில் சுமார் ரூ.77 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகளை இந்திய அரசு அன்பளிப்பாக வழங்குகிறது.இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் லீ க்சியன் லுங் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு இருந்து வருகிறது. சிங்கப்பூர் உருவாவதற்கு இந்தியர்கள் பெரிதும் துணைபுரிந்துள்ளனர். இந்தியாவுடன் கலாசாரம், வர்த்தகம் ஆகியவற்றுடன் நீண்ட தொடர்பு இருந்துள்ளது. தெற்கு ஆசிய கலாசாரம் உலகிலேயே பழமை வாய்ந்தது. சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்குகிறார்கள்’’ என்றார்.