நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி
5/8/2025 3:09:00 PM
நியாமி: நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், அண்டை நாடுகளான நைஜர், கேமரூன் ஆகியவற்றிலும் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். நேற்று நைஜரில் உள்ள கொக்கோடு கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள், பொதுமக்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனர். வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இதுமட்டுமின்றி வீடுகள், வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க நைஜீரியா, நைஜர், கேமரூன் ஆகிய நாடுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆனாலும் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், சிறுமிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலை படையாக மாற்றி வருகின்றனர். கடந்த வருடம் கடத்தி செல்லப்பட்ட 219 மாணவிகளின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 6 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. புதிய அதிபர் முகமது புகாரி, தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.