டெல்லி மீது மோடி அரசுக்கு அக்கறையில்லை ராஜ்நாத்சிங்கிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்
5/8/2025 2:55:56 PM
புதுடெல்லி: டெல்லி மாநில அரசு மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. இரண்டு அரசுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.டெல்லி அரசுக்கும் அதன் கவர்னர் நஜீப்ஜங்குக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அனைத்து கோப்புகளையும் கவர்னருக்கு அனுப்ப வேண்டாம் என தனது அமைச்சர்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து எல்லா கோப்புகளையும் தன்னிடம் அனுப்ப வேண்டும் என கவர்னர் புதிய உத்தரவு பிறப்பித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி அவரவர் அதிகாரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் டெல்லி அமைச்சர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லி அரசு மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாகவும், தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் மத்திய அரசுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் பல முக்கிய விவகாரங்களில் முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார். சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 84ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கான நிவாரண தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால் இதுவரை 17குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்பட்டிருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக மாநில அரசு ரூ. 10 கோடி ஒதுக்கியும் மத்திய அரசின் ஒத்துழைப்பு காரணமாக நிவாரண தொகையை விநியோகிக்க முடியாத நிலை இருப்பதாக கூறியுள்ளார்.