மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; பெடரர் அதிர்ச்சி தோல்வி
5/7/2025 2:56:31 PM
மாட்ரிட்: உலக நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் மாட்ரிட் ஓபன் 2வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் கிர்கியோஸிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்றுப்போட்டிகள் நேற்றிரவு நடந்தது . இதில் உலக தர வரிசையில் 2ம் நிலையில் உள்ளவரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், 20 வயதேயான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸை எதிர் கொண்டார்.33 வயது வீரரான ரோஜர் பெடரர் முதல் செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றினார். ஆனால், அதிவேகத்தில் சர்வீஸ் போடுவதில் வல்லவரான கிர்கியோஸ் அடுத்த 2 செட்களையும் டைபிரேக்கரில் வென்றார். கிர்கியோஸ் 7-6 (7-2), 6-7(7-5), 6-7(14-12) என மூன்று செட்களில் பெடரரை வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். கிர்கியோஸ் அடுத்த செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர் கொள்ள உள்ளார்.
‘கிர்கியோஸ் வீசிய முதல் சர்வீஸ்களை என்னால் சரிவர திருப்ப முடியவில்லை. சர்வீஸ்களை திருப்பி அனுப்புவதில் மிகவும் மோசமாக செயல்பட்டேன். இதனால் ஆட்டத்தில் தோல்வியடைய நேரிட்டது’’ என்று பெடரர் கூறினார். மாட்ரிட் ஓபன் பட்டத்தை ஐந்தாம் முறையாக வெல்லும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ள மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் 6-4, 6-3 என நேர் செட்களில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தினார். நடால் அடுத்த சுற்றில் இத்தாலியின் சிமோன் போலேலியை எதிர் கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்காவை எதிர் கொண்டார். இந்தப்போட்டியில் முதல் செட்டை டை பிரேக்கரில் செரீனா வில்லியம்ஸ் வென்றாலும், இரண்டாவது செட்டை அதிரடியாக கைப்பற்றி செரீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அசரெங்கா. மூன்றாவது செட் இழுபறியாக இருந்தது. இதில் அசரெங்காவுக்கு 4 முறை மேட்ச் பாயிண்டுகள் கிடைத்தும், செரீனா வில்லியம்ஸ் சிறப்பாக பதிலடி கொடுத்து செட்டை, டை பிரேக்கரில் கைப்பற்றினார். செரீனா இந்த ஆட்டத்தில் 7-6(7-5), 3-6, 7-6(7-1) என மூன்று செட்களில் போராடி அசரெங்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.