கெயில் சிக்சர் மழையில் நொறுங்கிய பஞ்சாப் 138 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி
5/7/2025 2:55:32 PM
பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின், 40வது லீக் ஆட்டம் நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பெய்லி, பவுலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் ரன் குவிக்க தடுமாறி வரும் சேவாக் நீக்கப்பட்டு, மனன் வோரா சேர்க்கப்பட்டார். பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் மீண்டும் அணிக்கு திரும்பினார். மேலும் இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் அரவிந்த் சேர்க்கப்பட்டார். பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல்-கேப்டன் விராத் கோஹ்லி களமிறங்கினர். பெங்களூர் அணி துவக்கம் முதலே அதிரடியில் இறங்கியது. குறிப்பாக கிறிஸ் கெய்லின் பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரிக்கும், சிக்சருக்குமாய் பறந்தன. ஜான்சன் வீசிய 2வது ஓவரில், 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார் கெய்ல். சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரிலும், 2 சிக்சர்கள், 2 பவு ண்டரிகளை கெய்ல் பறக்க விட்டார்.
ஒரு பக்கம் கோஹ்லி நிதானத்தை கடைபிடித்தாலும், மறுமுனையில் கெய்ல் ருத்ரதாண்டவம் ஆடியதால், பெங்களூரின் ரன் ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. நிச்சயமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாடுவேன் என கூறியதற்கு ஏற்ப, கெய்ல் மட்டை சுழற்றினார். இந்த அதிரடியால் 4 ஓவர்கள் முடிவிலேயே பெங்களூர் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய கெய்ல், 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். அக்ஷர் பட்டேல் வீசிய 8வது ஓவரில், கெய்ல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மனன் வோரா வீணடித்தார். இதை பயன்படுத்தி கொண்ட கெய்ல், ஒவ்வொரு ஓவரிலும் வரிசையாக சிக்சர்களை விளாசி தள்ளினார். முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவர்களில், 119 ரன்கள் சேர்த்த நிலையில், சந்தீப் சர்மா ஒரு வழியாக இந்த ஜோடியை பிரித்தார். சந்தீப் சர்மாவின் யார்க்கர் பந்தில், 32 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லி, ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.
இதன்பின் டிவில்லியர்ஸ், கெய்லுடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்சும் எடுத்த எடுப்பிலேயே அதிரடியில் இறங்க, பஞ்சாப் பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனிடையே சிக்சர் மழையில் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்த கெய்ல், ஜான்சன் பந்தில் பவுண்டரி விளாசி 46 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் கெய்லின் 14வது சதம் இது. மறுபக்கம் டிவில்லியர்ஸ்சும் தன் பங்குக்கு சிக்சர்களாக விளாசி தள்ளினார். இதனால் 14.2 ஓவர்களில் பெங்களூர் 150 ரன்களை கடந்தது. கரண்வீர் சிங்கின் 15வது ஓவரில், டிவில்லியர்ஸ் ஹாட் ட்ரிக் சிக்சர்களை விளாசினார். ஸ்கோர் 190 ரன்களாக உயர்ந்த போது, அக்ஷர் பட்டேல் வீசிய பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து கெய்ல் ஆட்டமிழந்தார்.
கெய்ல் 57 பந்துகளில் 117 ரன்கள் (7 பவுண்டரி, 12 சிக்சர்) குவித்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், வந்த வேகத்தில் சந்தீப் சர்மாவின் பந்தை சிக்சருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்து, மிடில் ஸ்டம்பை பதம் பார்க்க, வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையை கட்டினார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 47 ரன்களுடனும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), சர்ப்பராஸ் கான் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் 6 பவுலர்கள் பந்து வீசினர். இதில், அனிருத் சிங் தவிர, மற்ற அனைத்து பவுலர்களும் சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தனர்.
டி20 வரலாற்றில் 225க்கும் மேற்பட்ட ரன்கள், 2 முறை மட்டுமே சேஸ் செய்யப்பட்டுள்ளன. இந்த இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜய்-மனன் வோரா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே, வோராவின் விக்கெட்டை கைப்பற்றி, பஞ்சாப்பிற்கு அதிர்ச்சியளித்தார் ஸ்டார்க். வோரா 2 ரன்கள் மட்டுமே எடுத்து, டேவின் விசாவின் சூப்பர் கேட்ச்சில் பெவிலியன் திரும்பினார். பேட்டிங்கை போலவே பவுலிங்கிலும் பெங்களூர் அணி அசத்தியது. ஸ்டார்க், அரவிந்த் வேக தாக்குதலில், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் சரண் அடைந்தனர். முரளி விஜய் 2, கெய்லின் அதிரடிக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் பெவிலியனுக்கு நடையை கட்டினர். அரவிந்த் வீசிய 6வது ஓவரில், பஞ்சாப் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அந்த ஓவரின் 4வது பந்தில் சாகாவும், கடைசி பந்தில் மில்லரும் ஆட்டமிழந்தனர். சாகா 13, மில்லர் 7 ரன்கள் எடுத்தனர். அரவிந்த் வீசிய 8வது ஓவரில், 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பெய்லி போல்டு ஆனார். 9வது ஓவரில், ஸ்டார்க் தன் பங்குக்கு ஜான்சன் (1) மற்றும் அனிருத் சிங்கின் (0) விக்கெட்டை கைப்பற்றினார். பேட்ஸ்மேன்கள் நூல் பிடித்தாற்போல் அவுட்டானதால், வெறும் 49 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது பஞ்சாப். பஞ்சாப் அணியை 86 ரன்களுக்குள்ளாக ஆல் அவுட் செய்தால், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு பெங்களூருக்கு கிடைத்தது. ஸ்கோர் 65 ரன்களாக உயர்ந்தபோது, கரண்வீர்சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தால்.
இதனால் பெங்களூருக்கு வரலாற்று வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டானது. ஆனால் பெங்களூரின் இந்த ஆசையை, அக்ஷர் பட்டேல் முறியடித்தார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், அக்ஷர் பட்டேல் தயக்கமின்றி அதிரடியில் இறங்கினார். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு, அக்ஷர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்த, சந்தீப் சர்மாவின் விக்கெட்டை, சஹல் கைப்பற்றினார். இதனால் 13.4 ஓவர்களில், பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அக்ஷர் பட்டேல் 21 பந்துகளில் 40 ரன்கள் ( 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் அணியில் 9 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். சாகா, அக்ஷர் பட்டேல் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். பெங்களூர் தரப்பில் ஸ்டார்க், அரவிந்த் தலா 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல், சஹல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு, 5வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி, பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதிரடியில் மிரட்டிய கெய்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.