செம்முனீஸ்வரர் கோயில் விழாவில் 4 ஆயிரம் ஆடுகள் பலி
5/2/2025 12:30:02 PM
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பூசாரியூரில் பழமை வாய்ந்த செம்முனீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த ஏப்ரல் 17ம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா துவங்கியது. நேற்று பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி வாண வேடிக்கையுடன் பூசாரியூரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள வனக்கோயிலுக்கு செம்முனிச்சாமி, பச்சியம்மன், மன்னாதசாமி ஆகிய சப்பர தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர்.வனக்கோயிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக 4,000 ஆடுகளுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 4 பூசாரிகள், ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டுக் குட்டிகளை வெட்டி பலி கொடுத்து ரத்தத்தை வாயால் உறிஞ்சி குடித்தனர்.பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி, பூசாரியூர், பட்லூர் பகுதிகளை சேர்ந்த கோயில் முகமைதாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.அந்தியூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, அம்மாபேட்டை, பட்லூர், பூசாரியூர், பூனாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.