காலி குடங்களுடன் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் : ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
4/30/2015 3:26:33 PM
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை ரிப்பன் மாளிகை மன்ற கூடத்தில் நடைபெற்றது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது எதிர்கட்சி தலைவர் சுபாஷ் சந்திர போஸ் எழுந்து சென்னையில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது என்று பேசினார். இதற்கு மேயர் சைதை துரைசாமி அடிப்படை ஞானமில்லாமல் குடிநீர் பிரச்சனை பற்றி பேசாதீர்கள் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்புக்கு பின்னர் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை பாட்டிலில் பிடித்தும், காலி குடங்களுடன் திமுக உறுப்பினர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘குடம் இருக்கு குடிநீர் எங்கே, குடிநீர் பஞ்சத்தை போக்க மாநகராட்சியே நடவடிக்கை எடு’ என்று உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
தொடர்ந்து நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவரும், திமுக கவுன்சிலருமான சுபாஷ் கூறும் போது, ‘‘சென்னையில் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிப்பதற்காக முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. அவ்வாறு செய்வதாலும் குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. அவர்கள் அரசிடம் நேரடியாக பேச முடியாது என்பதற்காக வார்டு உறுப்பினர்களாக எங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால், மற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. போர்க்கால நடவடிக்கை எடுத்து உடனடியாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்’’ என்றார்.