தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்
4/30/2015 2:09:49 PM
புதுடெல்லி: தெகல்கா மற்றும் டிஎன்ஏ பத்திரிகை மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவர வலியுறுத்தி மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 60 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.ராஜ்யசபா நடவடிக்கைகளை ஒளிபரப்ப தனியாக ஒரு சேனல் உள்ளது. நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த சேனலுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1700 கோடி செலவிடப்பட்டதாக தெகல்கா பத்திரிகை கட்டுரை வெளியிட்டது. டிஎன்ஏ பத்திரிகை இதனை மறு வெளியீடு செய்தது. மேலும் ராஜ்யசபா டிவியின் செயல்பாடுகள் குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு கட்சி பாகுபாடு இன்றி பல எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். பொய் தகவல்களை வெளியிட்ட பத்திரிகை மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வர வலியுறுத்தி 60 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
இது குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ராஜ்யசபா டிவிக்கு கடந்த ஆண்டுகளில் ரூ.146 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மேலும் அதன் செயல்பாடுகள் குறித்து தலைமை கணக்கு அதிகாரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த பிரச்னையை உரிமை மீறல் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாடியின் நரேஷ் அகர்வால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா ஆகியோர் ஆசாத்துக்கு ஆதரவாக பேசினார். பிரச்னையை உரிமைமீறல் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யாநாயுடு இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவையின் முன்பு அனைத்து தகவல்களும் இல்லை. அவையின் உரிமை மீறப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். ராஜ்யசபா செயல்பாடுகள் குறித்து விமர்சிக்க பத்திரிகைகளுக்கு உரிமை உள்ளது. இதனை யாரும் ஆட்சேபிக்க முடியாது. அந்த சுதந்திரம் மக்களுக்கு உள்ளது. குறிப்பாக பத்திரிகைகளுக்கு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அனைத்து உண்மைகளையும் அறிந்த பின்னர் முடிவு எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்றார்.