முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி
4/30/2015 2:09:23 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் நிலம் எடுப்பு மசோதா, ஜிஎஸ்டி மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மே 8ம் தேதி முடிவுக்கு வருகிறது. விடுமுறைகளை கழித்து விட்டால் இன்னும் 5 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, சிறார் நீதி சட்ட திருத்த மசோதா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை மசோதா, கருப்பு பண மசோதா ஆகிய முக்கிய மசோதாக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நிலம் எடுப்பு மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி பேரணியில் பொது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில சட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலர் வெளியில் தைரியமாக கருத்து தெரிவித்திருந்தாலும், உள்ளுக்குள் பாஜவுக்கு சிறிய தயக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் நில சட்டம் நாடாளுமன்றத்தில் எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே போல் சரக்கு மற்றும் சேவை வரிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் இந்த மசோதா குறித்த விவாதமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை விவாதத்துக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு சில எதிர்கட்சிகளை அரசு பக்கம் திருப்பிவிடலாம் என பாஜ தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இது எந்த அளவு வெற்றி பெறும் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இந்த மசோதாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் சட்ட மசோதாவையும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த மசோதா நேற்று மாநிலங்கள் அவையில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து மசோதாவை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பண மசோதா, சிறார் நீதி சட்டதிருத்த மசோதா போன்ற சட்டங்கள் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.