பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் : 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தானியங்களை கொள்முதல் செய்யவும் முடிவு
4/29/2015 3:38:50 PM
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 100 ஸ்மார்ட்டி சிட்டிகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தானியங்களை கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.புதுடெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடியது இதில் வெங்கய்யா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது, ஸ்மார்ட் சிட்டி திட்டம், வடமாநிலங்களில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து அலசப்பட்டது. இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதே போல் வட மாநிலங்களில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் தரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மழை காரணமாக ஈரம் பாதித்த கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்களை அதன் குறிப்பிட்ட ஈரபதத்திற்கும் சற்று கூடுதலாக இருந்தாலும் கொள்முதல் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பருவம் தவறிய மழை காரணமாக ஈரப்பதம் உள்ள கோதுமை உள்ளிட்ட தானியங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த சூழலில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கோதுமை உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்ய மறுத்தனர். இதனால் அப்பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசிவருகிறார். இந்த சூழலில் மத்திய அமைச்சரவை தானியங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.