ஏமன் உள்நாட்டு போர் காரணமாக 3 லட்சம் பேர் வீடு இழந்து தவிப்பு: ஐ.நா. தகவல்
4/29/2015 2:45:04 PM
சானா: ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து நடுத்தருவில் நிற்பதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. ஏமனில் அரசு படைகளுக்கு எதிராக ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி பழங்குடியினர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்கள. இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி சவுதி அரேபியா தப்பினார். ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் சவுதி போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏமன் உள்நாட்டு போருக்கு 1000 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொதுமக்கள். இதற்கிடையில் ஐ.நா.கோரிக்கையை ஏற்று விமான தாக்குதலை சவுதி அரசு சில தினங்கள் நிறுத்தி வைத்தது. கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் குண்டுகளை வீச தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஏமன் உள்நாட்டு போர் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியிருப்பதாகவும், வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதாகவும் ஐ.நா.மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. ஏமன் போர் காரணமாக அங்கு பணிபுரிந்து வந்த வெளிநாட்டினர் கடந்த மாத துவக்கத்தில் அவரவர் நாடுகளுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.