புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
9/27/2021 5:05:20 PM
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு 10 ஆண்டுகள் ஆனாலும் கூட எங்களது போராட்டம் அதுவரை தொடரும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் டெல்லியில் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் இன்று 10 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பஞ்சாப், அரியானா எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. காசியாபாத், குர்கான் போன்ற எல்லைகளில் விவசாயிகள் சாலையில் டிராக்டரை நிறுத்தி போராட்டம் நடத்தி வருவதால், வழக்கமான பணிக்காக டெல்லிக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். தலைநகர் டெல்லியில் சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. வாரத்தின் முதல் நாள் என்பதால், டெல்லியின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருந்தும், போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.
இதுகுறித்து, துணை போலீஸ் கமிஷனர் (டெல்லி) தீபக் யாதவ் கூறுகையில், ‘முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார். மேலும், மும்பை - அகமதாபாத் சாலையில், பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மும்பை, தானே, நவி மும்பை நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்தனர். பஞ்சாப் மற்றும் அரியானாவில் டெல்லி - அமிர்தசரஸ் உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தலைநகரில் செங்கோட்டையின் இருபுறமும் உள்ள சாலை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிறமாநிலங்களில் எதிர்கட்சிகள் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைட் கூறுகையில், ‘விவசாயிகள் சட்டத்தை கொண்டு வந்தது யார்?, இது யாருடைய அரசு? எங்கள் இயக்கம் அரசாங்கத்திற்கு எதிரானது. வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்; 10 ஆண்டுகள் ஆனால் கூட தொடர்ந்து போராடுவோம். இன்று மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம்’ என்றார்.