இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்

9/27/2021 4:49:18 PM
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

* பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் கைது
* அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் 500 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் 300 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது, இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாய விளை நிலங்களை தாரைவார்த்து விடும் என்பதால் விவசாயிகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பஞ்சாப், அரியானா, உ.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் அமர்ந்து தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 மாதங்களாக டெல்லி எல்லைகளில் கடும் குளிர், வெயில், மழைக்கு இடையே இப்போராட்டம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை ஒன்றிய அரசு நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியை தழுவின. இதனால் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் பரவியது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் இப்போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 26ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக இன்று 2-வது முறையாக மீண்டும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக டெல்லியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து மீரட் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் டெல்லி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதேபோன்று, உத்தரப்பிரதேசத்திலிருந்து காசியாபூர் செல்லும் வழிகளையும் மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பஞ்சாப்- அரியானா எல்லையில் உள்ள சாம்பு எல்லையையும், டெல்லி- அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் ஷாஹாபாத் எல்லையையும் மறித்து போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்து கொண்டுள்ள. டெல்லியில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர். தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. தமிழகத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், பாமக, தேமுதிக, மநீம, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் வர்த்த அமைப்புகள், பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கங்கள் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றன. ‘‘இன்று போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் திமுக இணைந்து நிற்கிறது’’ என அக்கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளர் என்.கே.கே.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த சென்னை மாநகர காவல் துறை ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இதனால் விவசாயிகள் நடத்தும் சாலைமறியல் போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து போராட்டம் நடைபெறும் அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர், கிண்டி, எழும்பூர் ரயில் நிலையம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் துணை கமிஷனர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் திட்டமிட்டப்படி விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிபிஐ(எம்.எல்) மாநில செயலாளர் என்.கே.நடராஜன் தலைமையில் 500க்கும் ேமற்பட்டோர் ஒன்று கூடி நாட்டின் முதுகு எலும்பான விவசாயத்தை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஒன்றியஅரசை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி இருந்தனர். அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் திடீரென அண்ணாசாலையில் அமர்ந்து வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வகையில் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அண்ணாசாலையில் அமர்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனாலும் தொடர்ந்து தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தலைவர்களை போலீசார் அருகில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் அடைத்துவைத்தனர். அதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசில் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியூ மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏழுமலை, தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, மீஞ்சூர், திருநின்றவூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், தாமரைப்பாக்கம், ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதியில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் உழவர் சந்தை அருகே ஏஐடியுசி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் மயில்வாகனன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெயபால், சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எல்பி எஃப் மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலை உழவர் சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த மறியலில் திமுக அவைத்தலைவர் திராவிட பக்தன், ஆதிசேஷன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், வழக்கறிஞர் பி.கே.நாகராஜ், சிபிஎம் மாநில பொதுக்குழு உறுப்பினர் பா.சுந்தர்ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி முழக்கமிடப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சாரங்கன், நிர்வாகிகள் லிங்கநாதன், பெருமாள், செல்வம், மூர்த்தி, வசந்தா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையிலும், மதுராந்தகத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மோகனன் தலைமையிலும், கூடுவாஞ்சேயில் செங்கை பொது தொழிலாளர் சங்க செயலாளர் சேஷாத்திரி ஆகியோர் தலைமையிலும் சாலை மறியல் நடந்தது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் நடந்தது. கீழ்வேளூரில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் எம்எல்ஏ நாகை மாலி பங்கேற்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியலும், ஒரு இடத்தில் ரயில் மறியலும் நடந்தது.

 திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சிங்களாஞ்சேரியில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத்தில் 40 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கும்பகோணம் ரயில் நிலையத்தில் மைசூர்-மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கரூர் மாவட்டத்தில் சித்தளவயலில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அண்ணா சிலை அருகே எம்எல்ஏ கண்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. திருவெறும்பூர், அந்தநல்லூர் பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. ஓயாமரி சுடுகாடு அருகே காவிரி பாலத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். டெல்டா மாவட்டங்களில் 220 இடங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டம் நடந்தது. சுமார் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் பரவலாக பல்வேறு இடங்களில் ரயில், சாலை மறியல் நடைபெற்றது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் 61 இடங்களில் ரயில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. பல இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  நெல்லை, தூத்துக்குடியில் 13 இடங்களில் மறியல் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் மறியல் போராட்டம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் உள்பட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமையில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை 7 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் ரயில் நிறுத்தம் பகுதியில் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து திருப்பதி சென்ற ரயிலை மறித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.  மேலும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனமும் இன்றைய போராட்டத்தில்  பங்கேற்பதாக அறிவித்துள்ளதால் வங்கி ஊழியர்களும் தங்கள் எதிர்ப்பை  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 500 இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட எம்பி, எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பந்த் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதன் காரணமாக புதுச்சேரியில் முழு அடைப்பையொட்டி இன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்களும், பிஆர்டிசி அரசு பஸ்களும் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் பந்த் காரணமாக புதுச்சேரியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் நேரு வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியது. இதனிடையே மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஆங்காங்கே கைது செய்தனர்.

மேலும் சில
  • சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • கடந்த 5 ஆண்டு காலத்தில் 27 கோடி சொத்து குவிப்பு: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு



  • பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!



  • 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலையில் அதிரடி சரிவு: இன்று காலையில் பவுன் 400 குறைந்தது



  • நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெ. நினைவிடத்தில் சசிகலா மீண்டும் சபதம்?: அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவாரா



  • கொளத்தூர் தொகுதியில் 560 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு



  • நிதி நிறுவனத்திடம் வாங்கிய 1.21 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல்: கெஞ்சி கேட்கும் வீடியோ வைரலானது



  • ஊரக உள்ளாட்சி களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் உதித்திட வேண்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]