பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு
9/20/2021 5:21:41 PM
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். அதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கிவிட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி (58) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மேலிட பார்வையாளருமான ஹரிஷ் ராவத் நேற்று அறிவித்தார். இதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பட்டியலினத்தை சேர்ந்த முதல்வர் என்ற பெருமையை சரண்ஜித் சிங் சன்னி பெறுகிறார்.
முதல்வர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங் சன்னி அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, மாநிலத் தலைவர் சித்துவுக்கு நெருக்கமானவர் என்றும், அமரீந்தர் சிங்கை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சண்டிகர் ராஜ்பவனில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவில், பஞ்சாப்பின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பஞ்சாபில் முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் நபராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்ற நிலையில், துணை முதல்வர்களாக அமிர்தசரஸ் மத்திய தொகுதி எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சோனியும், சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவும் பதவியேற்றனர். இவர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
புதிய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய முதல்வராக ெபாறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னிக்கு, பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இன்று மாலை முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை, புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.