ஒன்றிய நிதியமைச்சக அறிவிப்பின்படி தமிழகத்தில் குத்தகைக்கு விடப்படும் அரசின் சொத்துகள் எவை?.. 4 விமான நிலையம், 491 கி.மீ. சாலை அடங்கும்
8/25/2021 5:01:20 PM
புதுடெல்லி: தமிழகத்தில் 4 விமான நிலையங்கள், 491 கிலோமீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கட்டமைப்பை மேம்படுத்த வசதியாக அரசின் சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு நிதி திரட்டவும், அதன் செயல் திறனை மேம்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார்.
அதன்படி, 4 ஆண்டு காலத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அரசின் பெரும் நிறுவன சொத்துகள் குத்தகைக்கு விடப்படும் நிலையில், தமிழகத்தில் குத்தகைக்கு விடப்படும் அரசின் சொத்து விபரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் திருச்சி விமான நிலையம், அடுத்த நிதியாண்டில் கோவை, மதுரை விமான நிலையங்கள்; அதற்கடுத்த நிதியாண்டில் சென்னை விமான நிலையம் தனியாரிடம் குத்தகைக்கு விடப்படும். இதேபோல், பாரம்பரிய நீலகிரி மலை ரயிலும் தனியாருக்கு விடப்படும். தமிழத்தில் உள்ள தேசிய ெநடுஞ்சாலைகளை பொருத்தமட்டில் கிட்டத்தட்ட 491 கிலோமீட்டர் தொலைவுக்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. அதன்படி, உளுந்தூர்பேட்டை- பாடலூர் இடையேயான 94 கிலோமீட்டர் நெடுஞ்சாலை,
உளுந்தூர்பேட்டை- திண்டிவனம் (73 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, திருச்சி - பாடலூர் (38 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி - தொப்பூர் கேட் (63 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, ஓசூர் - கிருஷ்ணகிரி 60 கிலோமீட்டர் 6 வழிச் சாலை, தாம்பரம் - திண்டிவனம் (61 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, திருச்சி புறவழிச் சாலையுடன் திருச்சி - காரைக்குடி (117 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும். மேலும், என்எல்சி நிறுவனத்தின் சூரிய மின்சக்தி கட்டமைப்பு, காவிரி டெல்டா பகுதியில் எரிபொருள் குழாய்கள், தூத்துக்குடி வஉசி துறைமுகம், புதுச்சேரி மற்றும் சென்னை ரயில் நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள ஓட்டல் பாண்டிச்சேரி ஆகியவை குத்தகைக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.