உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்; 2027ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்?.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பெயரும் பரிந்துரை
8/18/2021 5:23:11 PM
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் உயர் நீதிமன்றங்களின் இதர நீதிபதிகளையும் நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது, பதவி உயர்வு அளிப்பது ஆகியவற்றுக்கான இறுதி அதிகாரம் படைத்த அமைப்பே ‘கொலீஜியம்’ என்று கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளையும் சேர்த்து ஐந்து உறுப்பினர்களையும் கொண்டது கொலீஜியம். இவர்கள், ஐவரும் கலந்தாலோசித்து வாக்கெடுப்பு நடத்தி, அதிக வாக்கைப் பெறும் முடிவுகளே கொலீஜியத்தின் முடிவாக அறிவிக்கப்படுகின்றன. கொலீஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசுக்குக் தலைமை நீதிபதி அனுப்புவார். அதன்பின், குடியரசு தலைவரின் பெயரில் அறிவிப்புகள் வெளியாகும்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை பூர்த்தி செய்தல் தொடர்பாக ஒன்பது புதிய நியமனங்களுக்கான பரிந்துரையை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. கிட்டதிட்ட 22 மாதங்களுக்குப் பிறகு 9 புதிய நியமனங்களுக்கான பரிந்துரையை அனுப்பப்பட்டுள்ளது. 9 நீதிபதிகளில் மூன்று பேர் பெண் நீதிபதிகள். இவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த பட்டியலில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பிவி நாகிரத்னா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களில், நீதிபதி பிவி நாகரத்னா நாட்டின் முதல் உச்சநீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக முடியும் என்றும், அவர் வரும் 2027ம் ஆண்டுவாக்கில் அந்த பதவிக்கு வருவார் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது பெண் நீதிபதியாக இந்திரா பானர்ஜி மட்டுமே உள்ளார். அவரும் செப்டம்பர் 2022ல் ஓய்வு பெற உள்ளார். இதுவரை எட்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் பணி ஓய்வு பெற்றார். இவரது பணி ஓய்வுக்கு பின்னர், இந்த 9 நீதிபதிகள் பரிந்துரைகள் வந்துள்ளன. நீதிபதி நாரிமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொலீஜியத்தில் உறுப்பினராக இருந்தார். இவர், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி ஆகியோரின் பெயரை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இவர்கள் பெயர்கள் தற்போது பரிந்துரைக்கப்படவில்லை. மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி ஆகியோரின் பெயர்களும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்ஹா பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரது பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும். நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக இருக்கும். இதற்கிடையே, நீதிபதி நவீன் சின்ஹா ஒரு சில நாட்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.