தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவு: கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனையில் முடிவு
7/29/2021 5:11:46 PM
சென்னை' தமிழகத்தில் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நெல்லை, தென்காசி உட்பட 9 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்டம் சார்பில் கலெக்டர் விஷ்ணு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, நேர்முக உதவியாளர் (ஊரக தேர்தல்) ராம்லால், தேர்தல் பிரிவு தலைமை உதவியாளர் திராவிடன் மணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக பணியாற்றும் மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும், வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை பின்பற்றி ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாரித்த பின்னர் அந்த வாக்குச்சாவடிகளை முன்பே பார்வையிட்டு வசதிகள் உள்ளதாக என உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக ஒவ்வொரு பணிக்கும் கால நிர்ணயம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் வருமாறு:
* ஆக.3ம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்க வேண்டும்
* ஆக.4ம் தேதிக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்
* ஆக.5ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எம்பி, எம்எல்ஏக்களுடன் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து ஆக.8க்குள் ஆலோசனை நடத்த வேண்டும்.
* ஆக.9ம் தேதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கருத்துக்கள், முறையீடுகளை பதிவு செய்தல் வேண்டும்.
* வாக்குச்சாவடிகளின் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களின் ஒப்புதலுடன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆக.10ம் தேதிக்கு முன்னதாக பரிசீலித்து திருத்தம் செய்ய வேண்டும்.
* ஆக.11ம் தேதி இறுதி வாக்குச்சாவடிகளின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட வேண்டும்.
* ஆக.12ம் தேதிக்குள் இறுதி வாக்குச்சாவடிகளின் பட்டியலை அச்சிட்டு தயாரித்து விநியோகிக்க வேண்டும்
* சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலம் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு அந்தந்த உள்ளாட்சிகள் வாரியாக பிரித்து ஆக.21ம் தேதிக்கு முன்னதாக மாற்ற வேண்டும்.
* ஆக.26ம் தேதிக்கு முன்னதாக புகைப்படம் இல்லாத வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் இறுதி செய்ய வேண்டும். 28ம் தேதிக்குள் புகைப்பட வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர் பட்டியலை அச்சிட்டு வாக்காளர் பட்டியலை வெளியிட தயார் நிலையில் வைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.