அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: சசிகலாவுக்கு ஓபிஎஸ் பதிலடி
7/28/2021 5:08:59 PM
போடி: ‘அதிமுகவில் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் நடந்த இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளோம்.
ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, அதிமுகவை மீட்டுள்ளோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. நாங்கள் கட்சியை விட்டுத் தர மாட்டோம்’’ என்று தெரிவித்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த 2 நாட்களுக்கு முன் தனித்தனியாக புதுடெல்லி சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.
கட்சியில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக அங்கு விவாதம் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பின்னர் இருவரும் தனித்தனியாக தமிழகம் திரும்பிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.