கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்: தலைவர்கள் வாழ்த்து
7/28/2021 5:01:33 PM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து 2019, ஜூலை 26ம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது. அவர் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு உட்கட்சி பூசல் இருந்து வந்தது. அவருக்கு 78 வயதாகி விட்டதால் கட்சி கொள்கைப்படி அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் வலியுறுத்தினர்.
அதற்கு பணிந்த பாஜ மேலிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தது. இதற்கு மதிப்பளித்து, தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவு 7.30 மணிக்கு பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண்ரெட்டி முன்னிலையில் நடந்தது. மாநில பொறுப்பு முதல்வர் எடியூரப்பா உள்பட அவரது அமைச்சரவையினரும் கலந்து ெகாண்டனர். எம்எல்ஏ கூட்டம் தொடங்குவதற்கு முன் கட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
இதில் முதல்வர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. கட்சி எம்எல்ஏகள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மையை புதிய சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யும்படி பாஜ மேலிடம் கூறியுள்ள தகவலை மேலிட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து பசவராஜ் பொம்மை பெயரை எடியூரப்பா முன்மொழிந்தார். அதை கோவிந்த கார்ஜோள் வழிமொழிந்தார். அதை கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கை தட்டி வரவேற்று ஆதரவு ெகாடுத்தனர். அதை தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டதை அதிகாரபூர்வமாக தலைவர்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கட்சி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற பொம்மை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ெகாடுத்தார். அதையேற்று கொண்டார். அதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில் மாநில 15வது சட்டபேரவையின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் பொறுப்பு முதல்வர் எடியூரப்பா, கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண்ரெட்டி, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிய முதல்வருக்கு தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
பசவராஜ் பொம்மை வாழ்க்கை குறிப்பு: கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி-தார்வார் மாவட்டத்தில் எஸ்.ஆர்.பொம்மையின் மகனாக கடந்த 1960 ஜனவரி 28ம் தேதி பிறந்தார். பி.இ. மெகானிக்கல் முடித்துள்ளார். தந்தை வழியில் அவரும் அரசியலில் இருந்தார். ஜனதாதளம் ஆட்சியில் ஜே.எச்.படேல் முதல்வராக இருந்தபோது, அவரின் அரசியல் செயலாளராக இருந்தார். ஹாவேரி மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் இருந்து கடந்த 1998, 2004 ஆகிய இரு முறை சட்டமேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தந்தை மறைவுக்கு பின், அரசியலில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2008 ஜனவரி மாதம் ஜனதாதள கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார்.
அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஹாவேரி மாவட்டம், ஷிங்காவி தொகுதியில் ேபாட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் நீர்பாசனத்துைற அமைச்சராக இருந்தார். 2013ல் நடந்த பேரவை தேர்தலில் 2வது முறையாக ஷிங்காவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2018ல் 3வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் 2019 முதல் நேற்று முன்தினம் வரை எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார். தற்போது மாநிலத்தின் 23வது முதல்வராக இன்று பதவியேற்றார். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை 8வது சட்டபேரவையின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 துணை முதல்வர்கள்: பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் புதிய துணை முதல்வர்களாக கோவிந்த எம்.கார்ஜோள் (தலித்), ஆர்.அசோக் (ஒக்கலிக) மற்றும் பி.ராமுலு (வால்மீகி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யும்போது பதவி பிரமாணம் எடுக்க முடிவு செய்ததால், அவர்கள் பதவி ஏற்கவில்லை. முதல்வராக பசவராஜ் பொம்மை மட்டும் பதவியேற்று கொண்டார்.
முன்னாள் முதல்வரின் மகன்
கர்நாடக மாநில சட்டப்பேரவை வரலாற்றில் 1996ம் ஆண்டு எச்.டி.தேவகவுடா முதல்வராக இருந்தார். அவருக்கு பின் அவரது மகன் எச்.டி.குமாரசாமி 2006 முதல் 2007 வரை 20 மாதங்களும், பின்னர், 2018 முதல் 2019 வரை 13 மாதங்களும் மாநில முதல்வராக இருந்தார். அந்த பட்டியலில் 2வதாக பசவராஜ் பொம்மை இணைந்துள்ளார். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை 1988 முதல் 1989 வரை முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை டெல்லி பயணம்
மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை பகல் 12.30 மணிக்கு முதல் அமைச்சரவை கூட்டம் அதிகாரிகளுடன் நடத்துகிறார். அதை தொடர்ந்து மாலை அமைச்சரவை விஸ்தரிப்பு செய்வது மற்றும் தனக்கு முதல்வராக வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களுக்கு நன்றி சொல்வதற்காக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.