எடியூரப்பா ராஜினாமா எதிரொலி; புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிப்பு: மேலிட பார்வையாளர்கள் இன்று மாலை பெங்களூரு வருகை
7/27/2021 5:06:25 PM
பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க பாஜ மேலிட பார்வையாளர்கள் இன்று மாலை பெங்களூரு வருகிறார்கள். மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வந்தனர். சொந்த கட்சி எம்எல்ஏகளை புறக்கணித்து பிற கட்சியில் இருந்து வந்த 50 சதவீத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்துள்ளதால், தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
சில மூத்த எம்எல்ஏகள் மவுனமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய விஜயபுரா நகரம் தொகுதி எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல், ஆர்.யத்னால் வெளிப்படையாகவே எடியூரப்பா மீது கடுமையான விமர்சனங்களை கூறினார். அவருக்கு ஆதரவாக சில மூத்த எம்எல்ஏகள் இருந்தனர். மாநில பாஜவில் ஆட்சி தலைமை மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கட்சி தலைமையிடம் லாபி நடத்தினர். அதற்கு பணிந்த பாஜ மேலிடம், வயதை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் படி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தது.
கட்சி தலைமையின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை அங்கிகரித்துள்ள மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய அரசு அமையும் வரை பொறுப்பு முதல்வராக இருக்கும்படி எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டார். மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதால், புதிய அரசு அமைய வசதியாக பாஜ எம்எல்ஏகள் கூட்டம் நடத்த வேண்டும். இதில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்ய வேண்டும். அவர் முறைப்படி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கடிதம் கொடுக்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.
புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக இன்று காலை டெல்லியில் பாஜ உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. அதில் யாரை முதல்வராக நியமித்தால் ஆட்சி சுமூகமாக இயங்குவதுடன் கட்சி வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும் என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள். முதல்வர் பதவி போட்டியில் சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரி, பி.எல்.சந்தோஷ், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ்நிராணி, சி.டி.ரவி, பாஜ எம்எல்ஏ அரவிந்த பெல்லத் உள்பட பலரின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இதில் முருகேஷ் நிராணி மற்றும் அரவிந்த பெல்லத் ஆகியோரை முதல்வராக்க பெரும்பான்மையான பாஜ எம்எல்ஏகள் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பாகவும் உயர்நிலை குழுவில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மற்றவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆட்கள் மூலமும், ஆர்எஸ்எஸ் மூலமாகவும் முதல்வர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில் மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ்கோயல், பூபேந்திரயாதவ் ஆகியோர் இன்று மாலை பெங்களூரு வருகின்றர். அவர்களிடம் உயர்நிலை குழுவில் எடுத்துள்ள முடிவுகளை மேலிட தலைவர்கள் தெரிவித்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த தலைவர்களிடையே பலத்த போட்டி நிலவுவதால், இதுவரை முதல்வர் யார் என்பதை முடிவு செய்யமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையில் பெங்களூருவில் இன்று காலை பொறுப்பு முதல்வர் எடியூரப்பாவை முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிராணி சந்தித்து பேசினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள எடியூரப்பா இன்று காலை வழக்கம் போல், எழுந்து வாக்கிங் சென்றார். பின் சில நிமிடங்கள் யோகாசனம் செய்தபின், வீட்டின் வளாகத்தில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு சென்று, அவர் அன்பாக வளர்த்து வரும் மாடுகளை தடவி கொடுத்தார். அப்போது எடியூரப்பாவை சந்திக்க வந்த சிலரிடம் பேசிய பின், வீட்டிற்குள் சென்று விட்டார். அதேநேரத்தில், முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாலும், இன்னும் யாரையும் முடிவு செய்யாததாலும், கர்நாடகா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.