உட்கட்சி பூசல், பதவி போட்டி, சசிகலா விவகாரம்; மோடியுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு: அமித்ஷா, நட்டாவையும் சந்தித்து பேச திட்டம்
7/26/2021 5:28:58 PM
சென்னை: டெல்லி சென்றுள்ள எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்து பேசினர். அப்போது, உட்கட்சி பூசல், பதவி போட்டி, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அமித்ஷா மற்றும் நட்டாவையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல், அதிமுகவில் நிலவும் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாஜ திட்டமிட்டு காய் நகர்த்தியது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் முதல்வரான எடப்பாடியை தனது கைக்குள் போட்டு, பாஜ தனது வேலைகளை தொடங்கியது. அப்போது, தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஎஸ், இபிஎஸ் அழைத்து சமரசம் செய்து இருவரையும் பாஜ மேலிடம் இணைத்தது. அதன்பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் பாஜவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதிமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளில், தேனியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி முதல் பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு இருந்தது. இதில் இருந்து காப்பாற்றி கொள்ளவே, பாஜவுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி வைத்தது. இது, சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர்ந்தது. இந்த தேர்தலிலும் அதிமுக-பாஜ கூட்டணி தோல்வியை சந்தித்தது. பாஜவை கூட்டணியில் சேர்த்ததால் தான் தோல்வியடைந்தோம் என அதிமுக நிர்வாகிகளும், அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்தோம் என பாஜ தலைவர்களும் பகிரங்கமாக கருத்து மோதலில்ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பதவி போட்டி, கட்சியில் புதிய நியமனங்கள் என பல்வேறு விவகாரங்கள் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. இந்த மோதல் ஒன்றிய அமைச்சர் விவகாரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது. சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை. பாஜ தலைவராக இருந்த எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஓபிஎஸ் மகனுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுக்கக்கூடாது என எடப்பாடி கொடுத்த அழுத்தத்தால்தான் பாஜ மேலிட தலைவர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமையை நியமிக்கும் வகையில் பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவியை பிடிக்க இபிஎஸ் தீவிரம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சசிகலாவிடம் திடீர் போன் பேச்சு அதிமுகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் விட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா, தேர்தலுக்கு பின் மீண்டும் அரசியலில் இறங்கி உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 10.50 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ்சுடன் அவருடைய மருமகன் காசி விஸ்வநாதன் மட்டும் சென்றார். இந்தநிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று இரவு 9.30 மணியளவில் கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் புறப்பட்டு சென்றனர். அதிமுக ஆட்சியில் எடப்பாடி, ஓபிஎஸ் டெல்லி பயணம் என்றால், முன்னரே தேதி அறிவிக்கப்படுவது வழக்கம்.
இருவரும் தனித்தனியாக டெல்லி சென்றது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்று ஆட்சி இழந்த பிறகு முதல் முறையாக இரண்டு பேரும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக தலைவர்கள் ஆளாளுக்கு பேட்டி அளிப்பதும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவதும் என பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாஜவுடனும் அதிமுக எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற, உள்ளாட்சி உள்ளிட்ட தேர்தல்களை குறிவைத்து தமிழகத்தில் தங்களது பணியை செய்து வருகிறது.
சமீபத்தில் புதிய தலைவராக அண்ணாமலையும் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்ததால், மாநில பாஜ தலைமை, டெல்லி மேலிடத்திற்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரிலேயே, இருவரும் நேற்று டெல்லிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், நேற்றிரவு டெல்லியில் ஒன்றிய அமைச்சரும், முன்னாள் தமிழக பாஜ தலைவருமான எல்.முருகனை, ஓபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது, அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி உடனிருந்தார். தொடர்ந்து, இன்று காலை 11.05 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தம்பித்துரை, நவநீதகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது, ‘சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தல், ஒன்றிய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடனும் இவர்கள் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.