நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
7/14/2021 5:04:01 PM
புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை, மக்களை ஆட்டி படைத்தது. தற்போது, அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா தினசரி பரவல், உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு அளவை விட தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மற்றும் அனைத்து போக்குவரத்தும் அனுமதியளிக்கப்பட்டுள்து. பல இடங்களில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வதாகவும், இதனால் தொற்று 3வது அலை நிகழக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் புதிய தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் தொற்று பரவலில் கவலைக்குரியதாக காணப்படுகிற 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் மலைவாழிடங்கள், சந்தைகள் போன்றவற்றில் முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூடுவது குறித்து கவலை தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்துள்ள மாவட்டங்களை கொண்டுள்ள அல்லது மற்ற மாநிலங்களில் இருப்பதை போல தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்களின் முதல்வர்களுடன் அவர் உரையாட விரும்புகிறார். அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக நாளை மறுநாள் (16ம் தேதி) கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற மாநில முதல்வர்களான ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), எடியூரப்பா (கர்நாடகா), நவீன் பட்நாயக் (ஒடிசா), உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரா), பினராயி விஜயன் (கேரளா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.