உலகளவில் எந்த நாட்டிலும் ஏற்படாத அளவிற்கு இந்தியாவில் 7 நாளில் 22.49 லட்சம் பேர் பாதிப்பு: பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது
4/26/2021 4:55:42 PM
புதுடெல்லி: உலகளவில் எந்த நாட்டிலும் ஏற்படாத அளவிற்கு இந்தியாவில் கடந்த 7 நாளில் 22.49 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.இந்தியாவில் கொரோனா முதல் அலையில் ஏற்படாத பாதிப்புகளை காட்டிலும் தற்போது இரண்டாவது அலையில் உலகளவில் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் உயிரிழக்கும் சூழலும் இருந்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கணக்கெடுப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 6 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு மருத்துவமனைகளில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 333 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 561 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14.1 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி (நேற்று) வரையிலான ஏழு நாட்களில், 22.49 லட்சம் பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தினசரி இறப்பு விகிதத்தில் பிரதிபலித்துள்ளது. கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயிரிழப்பு 8,588 ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஏழு நாட்களில் 16,257 பேர் இறந்துள்ளனர். அதாவது இறப்பு 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த நோயாளிகளின் அதிகரிப்பு விகிதத்தை விட இது இரு மடங்காகும்.
இந்தாண்டு ஜனவரி 10ம் தேதியுடன் முடிவடைந்த ஏழு நாளில் 17.9 லட்சம் பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டனர். அதுவே, அதிகபட்ச ஒருவார பாதிப்பாக இருந்தது. அதே பட்டியலில் ஒரு வார பாதிப்பில் பிரேசிலில் அதிகபட்சமாக 5.4 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 4.3 லட்சம் பேரும், துருக்கியில் 4.2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு வார பாதிப்பில் இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 23,411 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. பிரேசிலில் 21,865 பேரும், இந்தியாவில் 16,257 பேரும் இறந்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, டெல்லி, மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை பதிவாகி வருகிறது. இறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி இறப்பு 832 ஆகவும், டெல்லியில் 350 ஆகவும், உத்தர பிரதேசத்தில் 208 ஆகவும், சட்டீஸ்கர், குஜராத், கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளன.