இன்று அதிகாலை பயங்கரம்; கொரோனா மருத்துவமனையில் 6 நோயாளிகள் தீயில் கருகி பலி: மகாராஷ்டிராவில் சோகம்
3/26/2021 8:27:57 PM
மும்பை: இன்று அதிகாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் தீயில் கருகி பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பானுப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனா வார்டில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். சில மணி நேரங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 6 நோயாளிகள் பலியாகினர். 70க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்கப்பட்டு மாற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் பிரசாந்த் கடம் கூறுகையில், ‘22 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மூன்றாவது மாடியில் அமைந்துள்ள கொரோனா வார்டில் 76 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த தீவிபத்து சம்பவத்தில் 6 நோயாளிகள் பலியாகி உள்ளனர். ஏழு நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தனர். மீட்கப்பட்ட 70 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் முதல் தளத்தில் அதிகாலை 12.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.