திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
3/7/2025 5:35:13 PM
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான உடன்படிக்கை ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் இன்று காலை கையெழுத்தானது. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனித்தனியாக கருத்து கேட்டார். இதில், மாவட்ட தலைவர்கள் அனைவரும் திமுக கூட்டணியை வரவேற்று பேசினர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு காங்கிரஸ் குழுவை பேச்சுவார்த்தைக்கு நேரடியாக வருமாறு அழைத்தார். அதை தொடர்ந்து, நேற்றிரவு திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக பேச்சுவார்த்தையை முடித்து விட்டு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி மற்றும் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது மிகுந்த எழுச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது. மதச்சார்பற்ற இந்த கூட்டணி என்பது ஒரு நேர்கோட்டில் எங்களை இணைத்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதில் எங்களை இணைப்பது இந்த மதச்சார்பற்ற தன்மைதான். அது வெற்றி பெற வேண்டும் என தான் எங்கள் கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பாஜ இந்தியாவின் மிகப்பெரிய நோயாக வளர்ந்து நிற்கிறது. அந்த நோயை மற்றவர்களுக்கும் பரப்பி வருகிறது. கொரோனா நோயை காட்டிலும் கொடிய நோயாக பாஜ செயல்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அவர்கள் உட்புகுந்து அந்த கட்சிகளை உடைப்பது, பலவீனப்படுத்துவது, கட்சி மாற வைப்பது, அரசாங்கத்தை கவிழ்ப்பது உட்பட பல்வேறு வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் ஆழமாக வேரூன்றி இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்த்தது இதற்கு சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது. தமிழகத்தில் பாஜவின் ஆதிக்கத்தை நிலைநாட்டி விடக்கூடாது, அவர்களுக்கு ஏவல் புரியும் அதிமுகவிற்கு ஒரு வாய்ப்பை அளித்திட கூடாது, சமூக நீதிக்கு எதிராக இருக்கும் இந்த சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். வரும் தேர்தல் என்பது ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமான தேர்தல் அல்ல. இவைகளுக்கும் மேலாக ஒரு கொள்கையை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தேர்தல் என்று கருதி தமிழக காங்கிரஸ் இதில் ஈடுப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தமிழகத்திற்கு தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு எதிராக நடக்கும் யுத்தமாகும். இந்த யுத்ததில் நாம் வெற்றி பெற வேண்டும். தேசிய தோழர்கள் இந்த கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என ராகுல் காந்தி எங்களிடம் தெளிவாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருப்பெற்று இருக்கிறது. பொதுநியதியின் அடிப்படையில் இந்த மதசார்பற்ற கூட்டணியை அனைத்து கட்சிகளும் சேர்ந்து இழுத்து வெற்றி பெற செய்ய வேண்டும். 25 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாங்கள் கையெழுத்து இட்டிருக்கிறோம். எந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் 2 தினங்களில் அறிவிப்பு வெளியாகும். நான் போட்டியிடப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பிறகு தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாஜவின் சித்தாந்தத்தால் இந்தியாவின் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்துவருகிறது. சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியாவை பாஜ இழுத்து செல்கிறது. பணம் கொடுத்து பொய்களை பரப்பிவருகிறது. தமிழகத்தில் அதிமுகவை அழித்து பாஜவை நிலைநாட்டுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. எதிர்கட்சிகளே இருக்க கூடாது எனவும், ஒரே கட்சியே ஆட்சி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் இடம் தர கூடாது. அதற்காக இந்த மதசார்ப்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றியின் மூலம் ஜனநாயகம், சமூக நீதித் தன்மை, சிறந்த ஆட்சிமுறை ஆகியவற்றை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
எந்த கட்சிக்கு எத்தனை?
திமுக கூட்டணியில் நேற்று வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சிக்கும் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டி உள்ளது. இந்த தொகுதி பங்கீடு முடிந்தவுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை துவங்க உள்ளனர்.