சசிகலா, டிடிவி படம் ஒட்டப்பட்ட ரூ.12 லட்சம் குக்கர்கள் பறிமுதல்: அரியலூரில் பரபரப்பு
2/27/2021 5:14:06 PM
அரியலூர்: அரியலூரில் 2 லாரிகளில் எடுத்து வரப்பட்ட ₹12 லட்சம் மதிப்பிலான குக்கர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை, கும்மிடிபூண்டியில் இருந்து தஞ்சைக்கு சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு லாரியில் இருந்தவர்கள் வெறும் பெட்டி என கூறிவிட்டு கிளம்பி சென்றனர். மற்றொரு லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டதில், அதில் குக்கர்கள் பெட்டி பெட்டியாக இருந்தது. அதில், தஞ்சை மாவட்ட அமமுகவினர், ஜெயலலிதா பிறந்த நாள் விழா என ஜெயலலிதா மற்றும் டிடிவி தினகரன் படம் போட்டு கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, பறக்கும் படையினர் துணை தாசில்தார் சரவணன் தலைமையில், எதிர்மானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு முன்னால் சென்ற லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, அங்கு தயாராக இருந்த போலீசார், அந்த லாரியை மடக்கி குக்கர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 2 லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இரண்டு லாரிகளிலும் ₹12 லட்சம் மதிப்பிலான 3 லிட்டர் குக்கர்கள் இருந்தன. ஒரு லாரியில் 110 பெட்டிகள் வீதம், 2 லாரிகளில் 220 பெட்டிகள் இருந்தன, ஒரு பெட்டியில் 16 குக்கர் வீதம் மொத்தமாக 3520 எண்ணிக்கையிலான குக்கர்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாாியை ஓட்டி வந்த இரண்டு டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.