அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் 60 தொகுதிகள் கேட்டு பிடிவாதம் இபிஎஸ், ஓபிஎஸ்சுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: பாமகவினர் அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை சந்திப்பு
2/27/2021 5:13:16 PM
சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை ெதாடங்கியது. பாஜக மீண்டும் 60 தொகுதிகள் கேட்டு பிடிவாதமாக இருந்ததால் இபிஎஸ், ஓபிஎஸ்சுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் இன்று மாலை பாமகவினர் அதிமுக நிர்வாகிகளுடன் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசுகின்றனர். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. அதே நேரத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கும், தேர்தலுக்கும் மிக குறைந்த நாட்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளன. திமுகவில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு உள்ளிட்ட உறுப்பினர்கள் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கூட்டணி கட்சிகளுடன் உடனடியாக ெதாகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் ஏற்கனவே பாமக, பாஜகவுடன் அதிமுக சார்பில் பல கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பாஜக தரப்பில் 60 தொகுதிகள் வரை கேட்கப்பட்டது. பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் பேசினார். அப்போது 100 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்து அதில் 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஒரு தொகுதி கூட குறைக்க முடியாது என்றும் கறாராக கூறினார். அதே நேரத்தில் சிறிய கட்சிகளுக்கு நாங்கள் சீட் வழங்கி விடுகிறோம் என்றும் அமித்ஷா தெரிவித்தார். ஆனால் இதற்கு அதிமுக சம்மதிக்கவில்லை. உங்களுக்கே இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கினால் பாமக, தேமுதிக, தமாகா அதிக தொகுதிகளை கேட்கும். எனவே, குறைவான தொகுதிகளை தான் ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பாமகவும் 40 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அவர்களுடன் அதிமுக அமைச்சர்கள் குழு 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் அதிமுக மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அதிமுக முதலில் உள்ள பாஜகவை இன்று காலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன் பேரில் மத்திய உள்துறை இணை அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கினர். சுமார் 1 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். மேலும் தொகுதிக்கான பட்டியலையும் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு தொகுதிகளை உங்களுக்கு வழங்கினால் மற்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும். எனவே, 20 தொகுதிகள் வரை தர சம்மதித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுங்கள் என்றும் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறைந்த பட்சம் 50 தொகுதிகளாவது ஒதுக்குகுங்கள் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அமமுகவுக்கு நாங்கள் 20 தொகுதிகள் ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உங்களுக்கு மட்டுமே கேளுங்கள். அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தொடர்ந்து பாஜக குழுவினர் துணை முதல்வர் ஓ.பன்னீர் ெசல்வத்தையும் சந்தித்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக பேசினர். அப்போது பாஜக குழுவினர் முதல்வரிடம் தெரிவித்த கருத்துக்களை ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர். இதனை கேட்ட ஓ.பி.எஸ். கட்சியினருடன் பேசி எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்வதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இன்று மாலை பாமகவினருடன் அதிமுகவினர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குகின்றனர். அவர்கள் 40 தொகுதிகள் வரை கேட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு 20 லிருந்து 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. தொடர்ந்து தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். நாளை காலை காரைக்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அவர், பிற்பகல் 4 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே முதல்வர், துணை முதல்வருடன் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பாஜ குழுவினர், இன்று இரவு சென்னையில் அமித் ஷாவை சந்தித்து தெரிவிக்க உள்ளனர். இதன்பிறகு அமித்ஷா கூறும் ஆலோசனைப்படி மீண்டும், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அதிருப்தி நிர்வாகிகளுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்கவே கூடாது என சமீபத்தில் தமிழகம் வந்த மோடியை தனியாக சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். அதற்கு, மோடியும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், சசிகலா தரப்பினர் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சசிகலா தரப்பு, ‘‘வரும் தேர்தலில் உங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறோம். தங்களது 40 தொகுதிகள் கொடுங்கள். பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை நாங்களே செய்கிறோம்’’ என தெரிவித்தனர். இதற்கு அமித்ஷா தரப்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், சசிகலா தரப்பினர் நம்பிக்கையுடன் உள்ளனர். தற்போது, தேர்தல் தேதி அறிவித்துள்ளதால் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிப்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. இதனால், அமித்ஷாவிடம் சசிகலா தரப்பினர் ரகசிய பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சசிகலா அதிமுக கூட்டணியில் உள்ளாரா? இல்லையா? என்பது தெரியவரும். கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் கையெழுத்தாகும் என கூறப்படுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.