8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்
1/26/2021 5:11:47 PM
புதுடெல்லி: கிட்டத்தட்ட 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான திட்டமுன்வடிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, இந்தத் திட்ட முன்வடிவு மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில் சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் பெறலாம்.
தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும். பொது போக்குவரத்து வாகனங்களான நகர பேருந்துகள் போன்றவற்றிற்கு குறைந்த அளவில் பசுமை வரி விதிக்கப்படும். மின்சாரம், மாற்று எரிவாயுகளில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். பசுமை வரியின் மூலம் பெறப்படும் வருவாய், மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இயங்கும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும். இத்திட்டம் வருகிற 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.