கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
1/26/2021 5:06:53 PM
புதுடெல்லி: டெல்லியின் எல்லையில் விவசாய சட்டங்களை வாபஸ் பெறக்கோரி போராட்டம் மற்றும் கொரோனா வழிகாட்டலுக்கு மத்தியில் குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் குறைந்தளவு பார்வையாளர்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகளின்றி நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநில, யூனியன் பிரதேச ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரில் தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
தலைநகர் டெல்லியின் ராஜ பாதையில் இருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் 8 கி.மீ. தூரம் வரை அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக துப்பாக்கிகளால் துல்லியமாக சுடும் வீரர்கள் உயரமான கட்டிடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க டெல்லி மற்றும் அதனைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அணிவகுப்பு செல்லும் தூரமும் குறைக்கப்பட்டது.
வழக்கமாக செங்கோட்டை வரை செல்லும் அணிவகுப்பானது, இம்முறை விஜய் சவுக்கிலிருந்து தேசிய அரங்கத்துடன் நிறைவடைந்தது. செங்கோட்டையில் மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றது. முதன்முறையாக, ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. மொத்தம் 32 அணிவகுப்பு ஊர்திகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 17, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து 6, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப் படைகளில் இருந்து 9 என்ற அடிப்படையில் அணிவகுப்புகள் நடந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. முன்னதாக காைல 9.40 மணிக்கு தேசிய போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.
அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர்கள் உள்ளிட்டோர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 10.03 மணிக்கு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். அதன்பின் நடந்த பல்வேறு அணிவகுப்பு மரியாதை மற்றும் ஊர்திகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழா நடந்து கொண்டிருந்த அதேவேளையில், டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகளும் நடந்தன. டெல்லியின் எல்லை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். குடியரசு தின விழா முடிந்த பின்னர், மாபெரும் டிராக்டர் பேரணி தொடங்கியது. குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.