நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம்; கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடியை ஏற்றினார்
1/26/2021 4:59:42 PM
சென்னை: நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று தமிழகத்திலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது நாட்டுப்பண் இசைக்கப்பட்டதுடன், ராணுவ ஹெலிகாப்டர் வானத்தில் பறந்தபடி தேசியக்கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் கவர்னர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் விழா மேடைக்கு வந்த கவர்னரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்ததும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் எடப்பாடி வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம், ராணிபேட்டை அரசு உயர்நிலைபள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை அறிந்து 26 மாணவிகளின் உயிரை காப்பாற்றியதற்காக உதவி ஆசிரியர் பா.முல்லைக்கு அண்ணா பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
அதேபோல், சேலம் மாவட்டம் ஓசூர் வனசரகத்தில் கால்நடை உதவி மருத்துவராக உள்ள எம்.பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்று சவர் இல்லாத 60 அடி ஆழமுள்ள 5 அடி தண்ணீர் கொண்ட கான்கிரீட் கிணற்றில் தவறி விழுந்த யானையை மீட்டு கொண்டு வர முயற்சி செய்தார். அதை பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது. அடுத்து, கடும் பனிப்பொழிவிலும் ரயில் தண்டவாளத்தில் இருந்த இரண்டு பாறாங்கல்லை பார்த்து உடனடியாக அவசரகால பிரேக்கை பயன்படுத்தி 1,500 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுனர் சுரேஷுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பிரிவில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த புகழேந்திரனுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவர் பிரசவம், மருத்துவ அவசரம், பேரிடர் காலத்தில் வாகனத்தை சரியான நேரத்தில் இயக்கி பலரது உயிர்களை காப்பாற்றியதை பாராட்டி அண்ணா பதக்கம் வழங்கப்படும். மேலும், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் கோயம்புத்தூரை சேர்ந்த அப்துல் ஜாபருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக 4 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. சென்னை தெற்கு மண்டலம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, சேலம் மண்டலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜூ,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகநாதன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காவலூர் மத்திய புலனாய்வு பிரிவு ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், 2019ம் ஆண்டு சிறப்பாக பணிகளை செய்தல், குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்ததை பாராட்டி சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார். அதன்படி தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த சேலம் மாநகரத்தை சேர்ந்த சேலம் நகர காவல் நிலைய ஆய்வாளர் பா.குமார் முதல் பரிசிற்கான கோப்பையை பெற்றார். 2வது இடத்தை,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் பா.சந்திரசேகரன் பெற்றார். 3வது இடத்தை சென்னை கிழக்கு மண்டலத்தை சேர்ந்த கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் கி.அஜூகுமார் பெற்றார். இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வருடன் விருது பெற்றவர்கள் குழு படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் தமிழக காவல் துறையின் வீரதீர சாகசங்கள் நடைபெற்றது. இதையடுத்து, கலை, கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை சிலம்பம் போன்ற வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை ஆண்களும், பெண்களும் நடத்தி காட்டினர். குடியடிசு தின நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீதிபதிகள், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு விருது
திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற க.செல்வக்குமாரை பாராட்டி 2020-2021ம் ஆண்டில் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட்டது. இவருக்கு ரூ.5 லட்சமும், பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஈரோடு துல்லிய பண்ணைய உற்பத்தியாளர் குழுமம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் குழுமத்துக்கு சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழுமம், விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுமத்துக்கு வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருதும் வழங்கப்பட்டது.