தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா
1/25/2021 5:01:48 PM
மும்பை: பாஜகவின் எதிரியாக மாறி மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா கட்சியின் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், ‘மேற்குவங்க அரசியல் நாளுக்கு நாள் மேலும் சுவாரஸ்யமடைந்து வருகிறது. ஆனால் இந்த பரபரப்பு ஒரு ரத்தக்களரி திருப்புமுனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்துத்துவா பிரச்னைகளை பாஜக தூண்டுகிறது. கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவில் ஒரு தீப்பொறி பரவவிடப்பட்டது. அரசு விழாவில் பிரதமர் முன்னிலையில் முதல்வர் மம்தா பேச எழுந்த போது, ‘ஜெய் ராம்’ என்று கோஷமிட்டார். அப்போது கோபமடைந்த மம்தா பானர்ஜி, ‘அது அவமானம்’ என்று கூறி பேச மறுத்துவிட்டார்.
இந்த விசயத்தில் மம்தா பானர்ஜியின் ‘வீக் பாயிண்ட்’ மேற்குவங்க பாஜகவால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்தல் வரை இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கங்களால் மம்தாவை எரிச்சலடையச் செய்யக்கூடாது என்பது எங்கள் கருத்து. மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வைக்க வேண்டும் என்பது பாஜகவின் தேசிய தலைமையின் முடிவு. அதன்படிதான், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மேற்குவங்கத்தில் பிரபலமடைந்துள்ளனர். தாகூரைப் போல தாடி வைத்துள்ள பிரதமர் மோடியும், மேற்குவங்கத்திற்கு வந்து மண்ணின் மைந்தர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றுள்ளார்.
இந்தியாவில் ஜனநாயகம் என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் ‘டிரம்ப் மனநிலை’ போன்றது அல்ல. மேற்குவங்கத்தில் பாஜக தனது மதப் பிரிவைத் தொடங்கியுள்ளது. இதற்கு மம்தா பானர்ஜியும் ஓரளவிற்கு பொறுப்பு. மம்தா பானர்ஜி முதல்வாராக இருந்த போதும், அவரது குரல் மக்களை சென்றடையவில்லை. தற்போது பாஜக தலைவர்கள் மேற்குவங்காளத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் ‘மொழி’யைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேற்குவங்கத்தின் அதிநவீன ஆளுநர் ஜெகதீஷ் தங்கரை என்ெவன்று சொல்ல... மகாராஷ்டிரா ராஜ் பவனில் என்ன நடக்கிறதோ அதேதான் கொல்கத்தா ராஜ் பவனிலும் நடந்து வருகிறது.
மத்திய உள்துறை துறைக்கு அறிக்கையை அனுப்புவதே ஆளுநரின் பணி. ஆனால், அவர் மேற்குவங்கத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு வளர்ந்து வருவதாக கூறுகிறார். இதுபோன்ற செய்திகளை அவர் எங்கிருந்து சேகரித்தார்? மேற்குவங்கத்தில் ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜா ராம்மோகன் ராய் போன்ற தலைசிறந்த மனிதர்கள் பிறந்தவர்கள். சுதந்திர போராட்டத்தில், மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னணியில் இருந்தன. இன்றும், மூன்று மாநிலங்களும் சுய மரியாதைக்காக போராடுகின்றன.
ஆனால் இந்த மூன்று மாநிலங்களுக்கும் எதிராக மத்திய அரசு நிற்கிறது. டெல்லி எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் மிதிக்கப்படுகிறார்கள். மேற்குவங்கம், மகாராஷ்டிராவில் அரசியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.