உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்
10/24/2020 5:32:54 PM
வங்கிக்கு ரூ6,500 கோடி வரை மத்திய அரசு செலுத்துகிறது
புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைகளுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி ரத்து சலுகை பெறுதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் வங்கிகளுக்கு மத்திய அரசு ₹6,500 கோடி வரை செலுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியதால், பல்வேறு தொழில் நிறுவனங்களும் கடும் இழப்பைச் சந்தித்தன. இதையடுத்து தனிநபர்கள், நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான தவணைகள் வசூலிக்கப்படுவதை மார்ச் 1 முதல் மே 31 வரை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. பின்னர் அது ஆக. 31ம் தேதி வரை நீட்டித்தது. ஆனால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி மீது வட்டி வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இவ்வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, கடன் தவணை வசூல் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதவிர, வேறு எந்த சலுகை நடவடிக்கை மேற்கொண்டாலும், அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணைக்கும் முடிவுற்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘மக்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைகளுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிப்பதை ரத்து செய்யும் முடிவை ஏற்கிறோம். இந்த வட்டி மீது வட்டி ரத்து பற்றிய தகவல் சாமானிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதை விரைந்து ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நவ. 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வட்டிக்கு வட்டி ரத்து தொடர்பான வழிகாட்டுதலுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கும், ஆறு மாத காலங்களில் வழங்கப்பட்ட கடனுக்கும், ஒட்டுமொத்த வட்டி, அதாவது வட்டிக்கு வட்டி மற்றும் எளிய வட்டிக்கு இடையிலான சமமான தொகையை மத்திய அரசு வங்கிக்கு செலுத்தும். அதாவது 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் வட்டிக்கு வட்டி ரத்து சலுைக பொருந்தும். இதன்படி, பிப்ரவரி 29ம் தேதி வரை மொத்தக் கடன் ரூ.2 கோடிக்கு மேல் வாங்காத கடனாளிகள் இந்த திட்டத்தால் பயனடைவர்.
மேலும், வீட்டுக் கடன்கள், கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள், வாகனக் கடன்கள், எம்.எஸ்.எம்.இ (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), நுகர்வுக்கான கடன்கள் பெற்றவர்களுக்கு பயன் கிடைக்கும். வட்டிக்கு வட்டி இடையிலான சமமான தொகையானது சம்பந்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களின் கடன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இது, மார்ச் 27, 2020 அன்று அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதலின்படியோ தகுதியான அனைத்து கடன் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்திட மத்திய அரசு கருவூலத்திற்கு ரூ.6,500 கோடி செலவாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.