ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்
10/22/2020 4:51:15 PM
பிரேசில்: பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு தன்னார்வலர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் 1, 2ம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர், ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்து வந்தார். அவருக்கு வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேசில் அரசோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும், இது குறித்து விசாரனை நடத்த பிரேசில் சுகாதார துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இதுபற்றி பதிலளிக்கவில்லை. இதையடுத்து, பிரேசிலில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் தடுப்பூசியை உருவாக்கி வரும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கூறுகையில், ‘ரகசியத்தன்மை மற்றும் மருத்துவ சோதனை விதிகள் காரணமாக கருத்து தெரிவிக்க முடியாது’ என்றது. அதே நேரத்தில், இறந்த தன்னார்வலர், தடுப்பூசி சோதனை செய்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.