மாதவரத்தில் நகை பறித்த 3 பேர் கைது: 12 சவரன், 2 பைக் பறிமுதல்
10/21/2020 5:00:33 PM
திருவொற்றியூர்: மாதவரத்தில் ஒரு மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சவரன் நகை மற்றும் 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை புழல், சிவராஜ் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தாமரை (78). இவர், கடந்த வாரம் மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் பணம் எடுத்தார். பின்னர் அங்குள்ள மகன் விஜயராஜின் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் செந்தாமரைக்கு உதவி செய்வது போல்நடித்தார். செந்தாமரை அசந்த சமயத்தில், அவர் கைப்பையில் வைத்திருந்த ₹5 ஆயிரம், 3 சவரன் நகைகளை மர்ம நபர் நூதன முறையில் எடுத்துக்கொண்டு நழுவினார்.
இப்புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், மாதவரம் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அந்த மர்ம நபர் ஒரு ஆட்டோவில் இருந்து இறங்குவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த ஆட்டோ பதிவெண்ணை வைத்து டிரைவர் ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மூலக்கடை பகுதியை சேர்ந்த மகபூப் பாட்சா (34), சுரேஷ் (30), தனசேகர் (28) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த 3 பேரும் சாலையில் தனியே நடந்து செல்பவர்களிடம் நூதன முறையில் நகை, பணத்தை கொள்ளையடிப்பதில் கில்லாடிகள் எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 12 சவரன் நகை, 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.