பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
9/28/2020 5:12:31 PM
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் தனித்தனி அணியாக திரண்டு போட்டி போட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், முதல்வர் பதவியையும் கைப்பற்ற சசிகலா முயற்சி செய்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார். பின்னர் 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். இதையடுத்து ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவியும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், வருகிற 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், `ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் சமரத்தையடுத்து, அதிமுகவில் யாரும் இனி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 18ம் தேதி அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நேரடியாக வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வருகிற 28ம் தேதி (இன்று) அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக ஒழுங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 298 பேர் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அழைப்பு கடிதம் அனுப்பப்பட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிமுக கட்சி அலுவலகம் அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அமர வைக்கப்பட்டனர். கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பேசும் காட்சிகள் பெரிய டிவி திரை மூலம் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியேர் 9.45 மணிக்கு வந்தனர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, அவரது ஆதரவாளர் தனித்தனியாக திரண்டு வாழ்க் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர்கள் காலை 9 மணியில் இருந்தே வர தொடங்கினர். அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிமுகவில் கோஷ்டி மோதல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் செயற்குழு கூட்டம் தமிழக அரசியலில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி பேசினர். அதேபோன்று, 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவையும் நியமிக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம், கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும், இருமொழி கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு, இந்திய காச்சார மறுஆய்வு குழுவில் தமிழக அறிஞர்கள் இடம்பெற வேண்டும், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசுக்கு நன்றி, அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர்கள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும் இன்று அதற்கான எந்த முடிவும் எடுக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இந்த பிரச்னை குறித்து விரைவில் கூட உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். அதேபோன்று, பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது.
இந்த பிரச்னை குறித்தும் அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்படியே அவர் வெளியில் வந்தால், என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசும்போது, \\”ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தொடர்ந்து கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரண்டு அணிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கனிசமான இடங்களை பெற முடியும். அதனால், மனகசப்பை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பில் உள்ளவர்கள் மரியாதை அளிக்க வேண்டும். கூட்டணி கட்சிகளாக பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவை இப்போது மிரட்ட தொடங்கியுள்ளது. அந்த மிரட்டல்களுக்கு பயப்படாமல் அதிமுகவில் நீண்டகாலமாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும்\\” என்பதை வலியுறுத்தியே பேசினர்.
ஓபிஎஸ் முகமூடியுடன் அவரது ஆதரவாளர்கள்
இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் கூடிய மூகமுடி அணிந்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலை, வீரவாள் கொடுத்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவிக்கப்படவில்லை. பூங்கொத்து மட்டுமே கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
போட்டி போட்டு பதாகை
முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதத்துக்கு இடையே அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் கூடியது. முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ‘2021ல் மீண்டும் முதல்வர், மக்களின் சாமானிய முதல்வர் என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்,‘அம்மா தந்த முதல்வர், வருங்கால முதல்வர் என்ற பதாகையுடன் போட்டி போட்டு கோஷமிட்டதால் ராயப்பேட்டையில் பரபரப்பு நிலவியது.
செல்போன் பயன்படுத்த தடை: அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும், உட்கட்சி விவகாரங்கள் மீதான விவாதங்கள் நடைபெற்றதால் உள்ளே நடக்கும் தகவல்கள் எதுவும் வெளியில் தெரியாத வகையில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது தலைமை அலுவலகத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால் அனைவரது செல்போன்களும் செயல் இழந்தது குறிப்பிடத்தக்கது.