வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு
9/27/2020 5:24:50 PM
சண்டிகர்: வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் பாஜ கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் விலகியது. கடந்த 22 ஆண்டுகால கூட்டணி உறவு முறிந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக அங்கும் வகித்துவந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சி வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், தமது மத்திய உணவு மற்றும் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உடனான கூட்டணி உறவு முறிவு குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சிரோன்மணி அகாலி தளம் நேற்றிரவு அதிரடியாக அறிவித்தது.
பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டீகரில் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜக - சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளுக்கு இடையேயான 22 ஆண்டுகளுக்கு மேலான கூட்டணி முறிந்தது. இதுகுறித்து கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வேளாண் விளைப்பொருள்களுக்கான குறைந்த ஆதார விலை விவசாயிகளுக்கு உறுதி செய்யும் அம்சத்தை புதிய மசோதாவில் இடம்பெற செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தினோம். விவசாயிகளின் நலன்சார்ந்த எங்களது இக்கோரிக்கை மத்திய பாஜக அரசு ஏற்கவில்லை. இதேபோன்று பஞ்சாபி மொழிக்கு, சீக்கியர்களுக்கும் எதிராக தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. எனவே, இனி மேலும் பாஜக கூட்டணியில் நீடிப்பது சரியாக இருக்காது எனக் கருதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, முன்னாள் மத்தியமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வேளாண் மசோதாக்களில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று கோடி விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் வலியை மத்திய பாஜக அரசு கொஞ்சமும் உணரவில்லை. அதனால், நாங்கள் கூட்டணியில் வெளியேறியுள்ளோம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - பாதல் ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணி, மத்திய அரசின் பிடிவாதத்தால் முறிந்துள்ளது’ என்று கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியுடனான சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி உறவை முறித்துக் கொண்டது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு சிரோன்மணி அகாலி தளம் வெளியேறும் முடிவானது அரசியல் கட்டாயம் மற்றும் அவநம்பிக்கையான முடிவு. ேவளண் மசோதா குறித்து பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்த அவர்களுக்கு, தற்போது வேறுவழியின்றி கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளனர்’ என்றார்.